2012-01-10 15:30:18

ஊட்டச்சத்து குறைபாடு தேசிய அவமானம் : இந்தியப் பிரதமர்


சன.10,2012. இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை, “ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு அதிகமாக” இருப்பதாகவும், இது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அவமானம் எனவும் பிரதமர் மன்மோகன்சிங் இச்செவ்வாயன்று கவலை தெரிவித்துள்ளார்.
HUNGaMA என்ற தலைப்பில், ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டபோது உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இவ்வாறு கூறினார்.
இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி, பாராட்டப்படும் விதத்தில் உயர்ந்திருந்தாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, நாம் இந்தக் குறைபாட்டை அகற்றுவதற்கான நடவடிக்கையில் வேகமாக முன்னேறவில்லை என்பதையே காட்டுகின்றது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் 9 மாநிலங்களில் 112 மாவட்டங்களில் 73 ஆயிரத்துக்கு அதிகமான வீடுகளில் இந்தப் புள்ளி விபரங்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாரிடமும் 74 ஆயிரம் தாய்மாரிடம் பேசி இவ்வறிக்கையைத் தயாரித்திருப்பது அசாதாரண விடயம் என்றும் மன்மோகன்சிங் கூறினார்.
இந்தியாவில் 6 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 16 கோடிக் குழந்தைகள் உள்ளனர் என்றுரைத்த பிரதமர், அறிவியலாளர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள், சமூகநலப்பணியாளர்கள் என இவர்கள்தான் பிற்காலத்தில் நாட்டிற்காக உழைக்கவிருப்பவர்கள் என்று கூறினார்.
ஊட்டச்சத்து குறைபாடு நீக்கிட அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. பல்முக விழிப்புணர்வுத் திட்டங்கள் 200 மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறன. இந்நிலை முற்றிலும் சீர்செய்யப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது என்பது நமக்கு ஏற்பட்டுள்ள தேசிய அவமானமாக இருக்கிறது. மாநில அரசுகளும் இது தொடர்பான திட்டத்திற்குத் துணையாக நின்று செயலாற்ற வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.