2012-01-09 14:51:02

திருத்தந்தை : “இறைவனின் குழந்தைகளாக” இருப்பதன் மகிழ்ச்சியை உணருவதற்கு அழைப்பு


சன.09,2012. திருமுழுக்குத் திருவருட்சாதனத்தால் “இறைவனின் குழந்தைகளாக” இருப்பதன் மகிழ்ச்சியை இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
நம் ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவாகிய இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 16 குழந்தைகளுக்குத் திருமுழுக்குத் திருவருட்சாதனத்தை நிறைவேற்றிய பின்னர், நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.
ஒவ்வொரு படைப்புயிரின் இருப்புக்கு, இறைவனே மூலகாரணமாக இருக்கிறார் என்றும், தந்தையாம் இறைவன் ஒவ்வொரு மனிதரோடும் தனிப்பட்ட விதத்தில் உறவு வைத்துள்ளார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழா பற்றிய சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை, நம்மை ஒன்றிணைப்பதற்கு அடிப்படையான வரையறை, நாம் குழந்தையாக இருப்பது என்றும், நம்மில் எல்லோரும் பெற்றோர் அல்ல, ஆனால் நாம் எல்லாரும் குழந்தைகள் என்று கூறினார்.
இவ்வுலகில் பிறப்பது நமது தேர்வு அல்ல, நாம் பிறப்பதற்கு ஆசைப்படுகிறோமா என்று நம்மிடம் முதலில் கேட்கப்படுவதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வாழ்க்கையை ஒரு கொடையாக வரவேற்பதற்கு, நாம் வாழும் காலத்தில் வாழ்க்கை பற்றிய ஓர் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது, நமது ஆன்மாவிலும் நம் பெற்றோருடனான உறவிலும் பக்குவமடைந்த நிலையைக் குறிக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
இவ்வெண்ணமானது, உயிரியல் ரீதியாக அல்ல, மாறாக, ஒழுக்க ரீதியாக பெற்றோராக இருக்கும் திறமையை மக்களில் ஏற்படுத்துகின்றது என்றுரைத்தத் திருத்தந்தை, நாம் ஒவ்வொருவரும் இறைவனால் அன்பு செய்யப்ப்டடு அவரின் திட்டத்தின்படி இருக்கிறோம் என்றும் கூறினார்.
திருஅவைக்கும் உலகத்திற்கும் மறுபிறப்பின் ஊற்றாக விளங்கும் திருமுழுக்கின் மாபெரும் மறையுண்மைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றும் மூவேளை செப உரையில் திருத்தந்தை கூறினார்.
நம் ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவோடு திருஅவையின் கிறிஸ்மஸ் காலம் முடிவடைகிறது.








All the contents on this site are copyrighted ©.