2012-01-09 14:52:55

தமிழகம் அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை: அப்துல்கலாம் ஆலோசனை


சன.09,2012. தமிழக நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைத்தால், அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என, முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.
சனவரி 5ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிக்கு இஞ்ஞாயிறன்று சென்ற அப்துல்கலாம், அங்கு நடந்த ஒரு விழாவில் பேசுகையில், பத்தாவது வயதுமுதல் தான் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் அதிகரித்தால், கற்பனைத் திறன் அதிகரிக்கும், நல்ல கற்பனைத் திறன்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கூறிய அபுதுல்கலாம், வேளாண்மை மற்றும் தமிழக நதிகள் குறித்து தான் அண்மையில் படித்த இருபுத்தகங்களைக் குறிப்பிட்டுப் பேசினார்.
செயற்கைக்கோளின் வழியாக, தமிழகத்தில் உள்ள நதிகளின் பிறப்பிடம், செல்லும் வழித்தடம், சமவெளியின் அளவு, பாயும் வேகத்தின் அளவு போன்றவற்றைத் துல்லியமாக அறிந்து, நதிகளை இணைத்து நீர்வழிச் சாலைகள் அமைத்தால், தமிழகத்தில் எப்போதும் வளம் கொழிக்கும் என்றும், அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அபுதுல்கலாம் தன் உரையில் எடுத்துரைத்தார்.
இந்தக் கனவை நனவாக்குவது இளையோர் கையில் உள்ளது என்பதை வலியுறுத்திய முன்னாள் அரசுத் தலைவர், உறக்கத்தின் போது வருவதல்ல கனவு; நம்மை உறங்கவிடாமல் செய்வதே கனவு; புத்தகம் கனவை வளர்க்கும்; கனவு படைப்புத்திறனையும், அறிவு வளத்தையும் கொடுக்கும்; ஆதலால், அனைவரும் புத்தகம் படிக்கும் வழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்துல்கலாம் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.