2012-01-09 14:50:50

சிஸ்டீன் சிற்றாலயத்தில் இஞ்ஞாயிறு காலை 16 குழந்தைகளுக்கு திருமுழுக்கு


சன.09,2012. வத்திக்கான் அருங்காட்சியகத்திலுள்ள சிஸ்டீன் சிற்றாலயத்தில் இஞ்ஞாயிறு காலை 16 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கித் திருப்பலியும் நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்குவதற்கு எடுக்கும் தீர்மானம், அவர்கள் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்றாக எடுக்கும் முதல் அறிவுப்பூர்வமான மற்றும் அடிப்படையான தீர்மானம் என்று கூறினார்.
இக்குழந்தைகள் இறைவனோடு நல்லுறவில் வளர்வதற்கு அவர்களின் பெற்றோர், ஞானப்பெற்றோர், குடும்பங்கள், மற்றும் நண்பர்களுக்கு இருக்கும் கடமையையும் திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
முதலாவது மறறும் உண்மையான கல்வியாளராக இருக்கும் இறைவனுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு கல்வியறிவு புகட்டும் போது, அது நேர்த்தியான பணியாக மாறுகிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
உண்மையான ஆசிரியர், தனது மாணவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மாட்டார், மாறாக, தனது மாணவர்கள் உண்மையை அறிவதற்கும், அவ்வுண்மையோடு தனிப்பட்ட முறையில் உறவை ஏற்படுத்திக் கொள்ளவும் அவர் விரும்புவார் என்றும் திருத்தந்தை தனது மறையுரையில் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.