2012-01-09 14:42:16

கல்வி, மதவிடுதலை மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை


சன.09,2012. கடந்த ஆண்டில் உலக அளவில் இடம்பெற்ற பொருளாதார மற்றும் நிதி நெருக்கடி குறித்தும், இன்றைய உலகில் கல்வி, மதவிடுதலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்குக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் திருப்பீடத்திற்கான நாடுகளின் தூதர்களுக்கு இத்திங்களன்று உரை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதத்தில் திருப்பீடத்திற்கான பல்வேறு நாடுகளின் தூதர்களை திருப்பீடத்தில் சந்தித்து வாழ்த்துச் சொல்லும் திருத்தந்தை, இவ்வாண்டும் இத்திங்களன்று அவர்களைச் சந்தித்தபோது, கடந்த ஆண்டின் நிதிநெருக்கடியால் பணக்கார நாடுகளும் ஏழை நாடுகளும் பாதிக்கப்பட்டதில் குடும்பங்களோடு இணைந்து இளைஞர்களும் துன்பங்களை அனுபவித்துள்ளனர் மற்றும் வருங்காலம் குறித்த அச்சமும் அவர்களில் உருவாகியுள்ளது என்ற கவலையை வெளியிட்டார்.
இளைஞர்களின் இத்தகைய அச்ச உணர்வே மத்தியக் கிழக்கு நாடுகள் சிலவற்றிலும் வட ஆப்ரிக்க நாடுகளிலும் அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களுக்கான குரலாய் ஓங்கி ஒலித்தது என்பதையும் குறிப்பிட்டார் பாப்பிறை.
ஓர் உறுதியான, ஒப்புரவு பெற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பும் பாதையில் அநீதியான பாகுபாட்டுமுறைகள், குறிப்பாக, மத அடிப்படையிலான பாகுபாட்டு முறைகள் அகற்றப்படவேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை, தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் குறுகிய கண்ணோட்டத்துடன் கூடிய திட்டங்கள் நீக்கப்படவேண்டும் என்று கூறினார்.
மதவிடுதலையைப் பற்றி பேசுகையில், கடந்த ஆண்டில் பாகிஸ்தானில் சிறுபான்மை சமூக அமைச்சர் Shahbaz Bhatti கொல்லப்பட்டது குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, சமூகத்திலிருந்து மதத்தை ஒதுக்கி வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாகக் கூறி, அமைதி, நீதி மற்றும் மனித மாண்பை மதிப்பதில் கல்வியறிவூட்டும் பள்ளியாக மதம் நோக்கப்படவேண்டுமேயொழிய, சகிப்பற்ற தன்மையின் பொருளாக நோக்கப்படக் கூடாது என்றார்.
சமூகப்பிரச்சனைகளை அலசுகையில், சிரியாவின் வன்முறைகள், மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற தன்மை, புனித பூமியில் இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான பதட்ட நிலைகள், ஈராக்கில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலகள் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
கடந்த ஆண்டில் உலகில் இடம்பெற்ற இயற்கைப் பேரழிவுகளையும் சுட்டிக்காட்டி, சுற்றுச்சூழலைக் காப்பதில் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய கடமைகளையும் வலியுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்துடன் உலகின் 178 நாடுகள் முழு அரசியல் உறவைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.