2012-01-09 14:52:43

அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் திரைப்படம்


சன.09,2012. கோவா மாநிலத்தின் பாதுகாவலர் என்று போற்றப்படும் அருளாளர் ஜோசப் வாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவாவின் Consua-Verna பகுதியைச் சார்ந்த அக்னெலோ பெர்னாண்டஸ் என்ற இளைஞர் உருவாக்கியுள்ள ‘Panvlam’ என்ற இத்திரைப்படத்தில், அருளாளர் ஜோசப் வாஸ் இலங்கைக்குச் சென்று உழைத்ததும், அங்கு அவர் சந்தித்த சவால்களும் காட்டப்பட்டுள்ளன.
நிலேஷ் கேனி என்பவரது ஒளிப்பதிவிலும், அருள்தந்தை பீட்டர் கர்டோசோ என்பவற்றின் இசையிலும் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை அனைத்து பள்ளிகளிலும், பங்குத்தளங்களிலும் திரையிடுவதற்கு கோவா பேராயர் Filipe Neri Ferrao ஒரு அத்தாட்சி மடலை அளித்துள்ளார் என்று திரைப்பட இயக்குனர் அக்னெலோ பெர்னாண்டஸ் கூறினார்.
1651ம் ஆண்டு கோவாவில் பிறந்த ஜோசப் வாஸ் தன் குருத்துவப் பணியை இலங்கையில் மேற்கொண்டபோது, இலங்கை Dutch ஆதிக்கத்தில் கத்தோலிக்க மறையை இழந்து வந்தது. இதைத் தடுக்க அருள்தந்தை வாஸ் இரகசியமாக பணிகள் செய்து, கத்தோலிக்க மறையைக் காத்து வந்தார்.
1711ம் ஆண்டு நோயுற்று இலங்கையில் காலமான இவரை, 1995ம் ஆண்டு இலங்கை சென்ற திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அருளாளராக உயர்த்தினார். அருளாளர் ஜோசப் வாஸ் அவர்கள் இறந்ததன் மூன்றாம் நூற்றாண்டு நினைவு சென்ற ஆண்டு கொண்டாடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.