2012-01-06 15:13:43

மியான்மார் கைதிகள் விடுதலை குடும்பங்களுக்கு ஏமாற்றம்


சன.06,2012. மியான்மார் நாட்டின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் போது, மனச்சான்றின் கைதிகள் மிகக் குறைந்த அளவே விடுதலை செய்யப்பட்டிருப்பது எதிர்க்கட்சியினருக்கும் குடும்பத்தினருக்கும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
மியான்மாரின் சுதந்திரதினமான சனவரி 4ம் தேதியன்று அரசு வழங்கும் பொது மன்னிப்பின் அடிப்படையில், அந்நாட்டில் கைதிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்படுவது அல்லது கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கமாக இடம் பெற்று வருகிறது.
ஆண்டுதோறும் இடம் பெறும் இந்நடவடிக்கையில் இப்புதனன்று சுமார் ஏழாயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் எனவும், 33 மரண தண்டனை கைதிகளின் தண்டனை, ஆயுட்தண்டனையாகக் குறைக்கப்பட்டது எனவும் New Light of Myanmar என்ற மியான்மார் அரசின் தினத்தாள் அறிவித்தது.
ஆயினும், மனச்சான்றின் கைதிகளில் 12 பேரே விடுதலை செய்யப்பட்டனர் என அந்நாட்டின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
மியான்மார் சிறைகளில் இன்னும் 1,500 அரசியல் கைதிகள் இருக்கின்றனர் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.