2012-01-06 14:08:28

சன 06, 2012. கவிதைக் கனவுகள்.......... கரையில்லாக் கல்வி


கல்விக்கும் கடவுளுக்கும் தான் கரையில்லையோ?
முற்றும் அறிந்துகொண்டேன் என்றோ
இனி பெற எதுவும் இல்லையென்றோ சொல்ல இயலுமா?
ஆழமாய், அகலமாய் சென்றாலும்
அடுத்த கரை என்று எதுவும் இல்லையே.
பெற்றோரும் பெரும் ஆசானும் நெருப்பூட்டினாலும்
பற்றியெரிவது நமக்குள்தானே.
கல்வி தந்த கடவுளும், கடவுள் தந்த கல்வியும்
நேர்கோட்டில் இல்லையென்றாலும்,
ஒப்புமைகள் ஆச்சரியமே.
தீமை அறிய கண் திறக்கும் கல்வியும் கடவுளும்.
தீமை அறிய, கண் திறக்கும் கல்வியும் கடவுளும்.
பிறருடன் பகிர அழைப்பு விடுத்து,
பகிரப் பகிரப் பரவும் ஈரறிவும்.
விடுதலை தரும். நம்மை கைத்தூக்கி விடும்.
இருள்நிறை பாதையில் வழிகாட்டி,
உறுதுணையாய் கூட வரும்.
துன்ப துயர்களில் வழிநடத்தும்.
நம்மையே நாம் உணர்ந்து கொள்ள உதவும்.
தேடிச் செல்லத் தூண்டி,
ருசிக்க ருசிக்கவே தாகம் தரும்.
பிறர் வழி பெறுவதே அடிப்படை எனினும்
உள் அனுபவமே முதன்மை பெறும்.
காசு பார்க்கும் கயவர்களின் கைப்பொருளானாலும்
கல்விக்கும் கடவுளுக்கும் கரையில்லை, கறையுமில்லை.








All the contents on this site are copyrighted ©.