2012-01-05 15:08:44

கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியரையும் விரோதிகளாகக் காட்டிவரும் ஊடகங்களால் நைஜீரியா மேலும் அழிவை நோக்கிச் செல்லும் - பேராயர் Onaiyekan


சன.05,2012. ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் தற்போது உருவாகியுள்ள பதட்ட நிலைகள் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே நிகழும் மோதல்கள் என்று ஊடகங்கள் கூறிவருவதை அந்நாட்டின் பேராயர் ஒருவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
கிறிஸ்மஸ் நாளன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களுக்கு போகோ ஹராம் என்ற அடிப்படைவாத இஸ்லாமிய குழு பொறுப்பேற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி பேசிய அபுஜா பேராயர் John Olurunfemi Onaiyekan, அந்நாட்டில் தற்போது நிலவும் போராட்டங்களை இரு மதங்களுக்கிடையில் உருவாகியுள்ள மோதல்களாக ஊடகங்கள் கூறிவருவது பொறுப்பற்ற ஒரு செயல் என்று வன்மையாக கண்டித்துள்ளார்.
திருப்பீடத்தின் சார்பாக இயங்கிவரும் Aid to the Church in Need என்ற கத்தோலிக்க பிறரன்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், நைஜீரியாவின் பல ஊர்களில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இணைந்து வாழ்கின்றனர் என்றும், ஒரு சில குடும்பங்களில் இவ்விரு மதங்களையும் சார்ந்தவர்கள் உள்ளனர் என்றும் பேராயர் Onaiyekan சுட்டிக் காட்டினார்.
இவ்விரு மதத்தவரையும் விரோதிகளாக உருவாக்கிவரும் ஊடகங்களால் இந்த நாடு மேலும் அழிவை நோக்கிச் செல்லும் ஆபத்து உள்ளதென்று அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
போகோ ஹராம் என்ற அடிப்படைவாதக் குழு இஸ்லாமியக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுகிறதென்பதையும், இக்குழுவால் இஸ்லாமியரும் வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் பேராயர் கூறினார்.
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் நைஜீரியாவில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக செபிக்கும்படி பேராயர் Onaiyekan தன் பேட்டியின் இறுதியில் அழைப்பு விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.