2012-01-04 14:44:54

சனவரி 04, 2011. கவிதைக் கனவுகள்............. விரும்பிப் பார்க்கிறேன்


பச்சைக் குழந்தையாய் பலர் முகம் பார்த்து சிரித்த காலம்
பழ விதை விழுங்கி வயிற்றில் மரம் வருமென பயந்த காலம்
மயிலிறகுக் குட்டியும், கொக்கிட்ட வெள்ளை நக மச்சமும்
இன்னும் மறையவில்லை மனதிலிருந்து.
நிலாமுற்ற சோறூட்டல்களில் மயங்காதபோது
பூச்சாண்டிகள் வலம் வந்த காலம் அது.
இன்னும் ருசிக்கிறது, இமை நனைதல்களின் ஓரத்தில்.
பேசத்தெரியாத காலத்தில் உணர்வுகளை காட்ட முடிந்தது.
பேசித் திரியும் நாட்களில் அதையே மறைக்கத் துடிக்கிறது.
காலங்கள் தாண்டி வந்தும் மழலைப் பருவத்தை மனம் நாடுகிறது.
கனவுகளில் ஆசை வளர்த்து, ஆசைகளையே கனவுகளாக்கி
ஏன் பிறந்தோம் என கேள்வி எழும்போது........
ஆரம்பப் புள்ளியிலிருந்தே துவங்க ஏங்குகிறது மனது.
பெற்றவர்க்கும் மற்றவர்க்கும் இன்பச் சுவையான குழந்தையெனும் மெய்
ஓர் 80 ஆண்டுகளில் சுமையாய் மாறிப்போனது எங்கனம்?
இடையில் சேர்த்தவைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.








All the contents on this site are copyrighted ©.