2012-01-03 15:09:51

பிலிப்பீன்சில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருஅவை சார்பில் 1000 வீடுகள்


சன.03,2012. பிலிப்பீன்ஸ் நாட்டின் அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நோக்கில் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருவதாக அந்நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
1200க்கும் மேற்பட்டோரைப் பலிவாங்கி, பல ஆயிரக்கணக்கானோரைக் குடிபெயர்ந்தவர்களாக மாற்றிய அண்மை வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறைவிடங்களைக் கட்டித்தர கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பிடம் 16 இலட்சம் டாலருக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக கூறினார் தலத்திருஅவை அதிகாரி குரு Edwin Gariguez.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தலத்திருஅவை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், அவர்களுக்கான உறைவிடங்களைக் கட்டும் பணி பிப்ரவரி மத்தியில் துவங்கும் எனவும் கூறினார் அவர்.
தற்காலிக முகாம்களில் வாழும் மக்களுக்கு நிரந்தர தங்குமிடங்களைக் கட்டிக் கொடுப்பதே தலத்திருஅவையின் தற்போதைய முதல் திட்டம் எனவும் உரைத்தார் குரு Gariguez.
இதற்கிடையே, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200 புதிய வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை, இயேசு சபையினரால் நடத்தப்படும் மணிலா அத்தனேயோ பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.