2012-01-03 15:05:35

நோயாளிகளும் வயதானவர்களும் திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும், திருத்தந்தை வலியுறுத்தல்


சன.03,2012. உடல்நலம் அல்லது வயது காரணமாக வழிப்பாட்டுத்தலங்களுக்குச் செல்ல இயலாதவர்கள், திருநற்கருணையை அடிக்கடிப் பெறுவதற்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுப்பதில் உலகளாவியத் திருஅவையும் பங்குச் சமூகங்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வலியுறுத்தியுள்ளார்.
உடல்நலமில்லாதவர்களும் முதியவர்களும் தங்களது வாழ்க்கையைக் கிறிஸ்துவின் அன்புக்காக அர்ப்பணிப்பதன் வழியாக கிறிஸ்துவோடு தங்களுக்குள்ள உறவை உறுதிப்படுத்துவதற்கு இதன்மூலம் வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
இதனாலே மருத்துவமனைகளிலும் முதியோர் இல்லங்களிலும் பணிசெய்யும் குருக்கள், “நோயாளரின் திருப்பணியாளர்கள்” என்று உண்மையிலேயே உணருவது முக்கியம் எனவும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
வருகிற பிப்ரவரி 11ம் தேதி லூர்து அன்னை திருவிழாவன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் 20வது அனைத்துலக நோயாளர் தினத்திற்கென இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட திருத்தந்தையின் செய்தியில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
“எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது”(லூக்.17:19) என்ற தலைப்பில் சிறப்பிக்கப்படவிருக்கின்ற இந்த 20வது அனைத்துலக நோயாளர் தினம், இவ்வாண்டு அக்டோபர் 11ம் தேதி தொடங்கவிருக்கும் அனைத்துலக விசுவாச ஆண்டின் மையப் பொருளை மீண்டும் கண்டுணரக்கூடியதாகவும் இருக்கின்றது என்றும் திருத்தந்தையின் செய்தி கூறுகிறது.
ஒருவர் குணமடைவதற்கு, “குணமாக்கும் திருவருட்சாதனங்கள்” குறித்த முக்கியத்துவத்தையும் விவரித்துள்ள திருத்தந்தை, ஒப்புரவு திருவருட்சாதனம், நோயில் பூசுதல் திருவருட்சாதனம், திருநற்கருணை திருவருட்சாதனம் ஆகிய மூன்றும் ஒருவர் உடலிலும் உள்ளத்திலும் குணமடைய உதவுவன என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
நல்ல சமாரித்தன் என்ற தலைப்பில் 2013ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி ஜெர்மனியில் வெகு ஆடம்பரமாக நடைபெறவிருக்கும் அனைத்துலக நோயாளர் தினம் பற்றியும் இச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.