2012-01-02 14:54:08

புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செபஉரை


சன.02,2012. அன்னை மரியாவின் வழியாகவும், குழந்தை இயேசுவின் முகத்திலும் இறைவனின் முகத்தைக் கண்டு, புலர்ந்திருக்கும் 2012ம் ஆண்டை நாம் துவக்குகிறோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
புதிய ஆண்டின் முதல் நாளன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வாண்டின் முதல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, சனவரி முதல் நாளன்று கொண்டாடப்படும் மரியா, இறைவனின் தாய் என்ற திருநாளைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்தார்.
45வது உலக அமைதி நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, அச்செய்தியில் வலியுறுத்தியுள்ள இளையோர் குறித்த தன் கருத்துக்களை மக்களுக்கு மீண்டும் இம்மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.
கல்வி, வேலைதேடுதல், வாழ்க்கைத்துணையைத் தேர்தல், குடும்பம் அமைத்தல் என்று வாழ்வின் முக்கியமான முடிவுகளில் சரியான பாதையைத் தேடும் இளையோருக்கு அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் ஆகிய அனைத்து அமைப்புக்களும் சரியான வழியைக் காட்ட வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்திக் கூறினார்.
நீதியையும், அமைதியையும் உலகில் நிலை நிறுத்துவது மிகப் பெரிய சவால் என்று சுட்டிக் காட்டியத் திருத்தந்தை, அமைதி என்பது ஒரு நாளில் அடையக்கூடிய ஓர் இலக்கு அல்ல என்றும், தொடர்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய ஒரு சவாலான பயணம் என்றும் திருத்தந்தை கூறினார்.
கிறிஸ்மஸ் காலத்தில் நாம் கொண்டாடும் அமைதியின் அரசர் மற்றும், அவரது தாய் நம் உலகத் தலைவர்கள் அனைவரையும் அமைதி மற்றும் நீதியின் பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற செபத்துடன் தன் மூவேளை உரையை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கூடியிருந்தோர் அனைவருக்கும் தன் சிறப்பான ஆசீரையும் வழங்கினார்.








All the contents on this site are copyrighted ©.