2012-01-02 14:52:47

திருத்தந்தை: நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு குடும்பங்களில் ஆரம்பமாகிறது


சன.02,2012. நீதியிலும் அமைதியிலும் இளைய தலைமுறையினரை வளர்க்கும் பொறுப்பு, குடும்பங்களில் ஆரம்பமாகி, பின்னர் பள்ளிகளிலும், இளையோரை நெறிப்படுத்தும் பல்வேறு அமைப்புக்களிலும் இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
‘நீதியிலும் அமைதியிலும் இளையோருக்கு கல்வி புகட்டுவது’ என்ற மையக் கருத்தில் 45வது உலக அமைதி நாளுக்கென தான் ஏற்கனவே வழங்கியிருந்த செய்தியை மையப்படுத்தி, புத்தாண்டின் முதல் திருப்பலியை நிறைவேற்றுகையில் தன் மறையுரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
புலர்ந்திருக்கும் புத்தாண்டின் முதல் திருப்பலியை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிறைவேற்றிய திருத்தந்தை, உண்மை என்பது பல வழிகளிலும் மறைக்கப்பட்டு வரும் இவ்வுலகில் இளையோருக்கு உண்மையை வழங்கும் பொறுப்பு முதியோராகிய நமக்கு அதிகம் உள்ளது என்று எடுத்துரைத்தார்.
அமைதியாக வாழ்வது என்பது இளையோர் சுயமாக விரும்பும் ஒரு நல்ல பண்பு; ஆயினும், உலகின் பல்வேறு எதிர்மறை சக்திகள் இளையோருக்கு அமைதிப் பாதையைக் காட்டத் தவறுவதால், அவர்கள் வன்முறைகளில் ஈடுபடவும் தூண்டுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, “பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.” என்ற 84வது திருப்பாடலின் வரிகளை மேற்கோள் காட்டி, வானின்று வரும் அமைதியையும், நீதியையும் இளையோரின் கவனத்திற்குக் கொண்டு வருவது நமது கடமை என்று கூறினார்.
புத்தாண்டின் முதல் நாளன்று திருத்தந்தை ஆற்றிய திருப்பலியில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் உட்பட பல திருப்பீட அதிகாரிகளும், பன்னாட்டு தூதர்களும் கலந்து கொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.