2011-12-31 13:44:15

சனவரி 01, கவிதைக் கனவுகள்


நாளுமொரு நல்லெண்ணம்... இது 2010ம் ஆண்டில் நாம் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி. வாழ்ந்தவர் வழியில்... இது 2011ம் ஆண்டு நாம் கடந்து வந்த வழி. புலர்ந்திருக்கும் புதிய ஆண்டு 2012ல் புதிய முயற்சியாக நாங்கள் துவங்க விழைவது... கவிதைக் கனவுகள்.
உள்ளத்தின் ஆழத்தில் உறைந்திருக்கும் அமைதியிலிருந்து உருவாவதே கவிதை என்று உலகப் புகழ்பெற்ற கவிஞர் William Wordsworth சொன்னார். பல கோடி கவிஞரின் உள்ளங்களில் உறைந்திருக்கும் அமைதியில் உதிக்கும் கனவுகள் கவிதைகளாய் உலகில் பிறக்கின்றன. வலம் வருகின்றன. வெறும் வார்த்தை விளையாட்டாய் வலம் வரும் கவிதைகளைக் காட்டிலும், கனமான கருத்துக்களைச் சுமந்து வரும் கவிதைகள் இந்தப் பகுதியில் இடம்பெறும்.
இக்கவிதைகள் வத்திக்கான் வானொலி தமிழ்ப் பிரிவில் பணிபுரியும் எங்கள் சொந்தக் கவிதையாக இருக்கலாம், அல்லது வானொலி நேயர் குடும்பம் எங்களுக்கு அனுப்பி வைக்கும் கவிதைகளாக இருக்கலாம், அல்லது நாங்கள் வாசித்து பயன்பெற்ற கவிதையாக இருக்கலாம்...
இன்று முதல் கவிதைக் கனவுகளை வத்திக்கான் வானொலி குடும்பத்துடன் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறோம்.

-----------------------------------------
பனித்துளி சங்கர் என்பவர் 'இதயம் ஒரு வெற்றுக் காகிதம்' என்ற தலைப்பில் எழுதிய புத்தாண்டு சிறப்புக் கவிதையின் ஒரு சில பகுதிகள் இதோ:

இனிவரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள்வரை தோல்விகள் சுமந்த இத்தோள்கள்
இனிவரும் நாட்களில் இமயம் தாண்டும் சாதனைகளைச் சுமக்கும்!

இதுநாள்வரை உதடு சுழித்து
உதறித்தள்ளிய பணிகள் எல்லாம்
பனித்துளி வசிக்க புதிதாய் புன்னகையுடன்
ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.

கல்விக்காக மூடிய கதவுகளை
தட்டித் தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை!
இனிவரும் நாட்களில்
ஏழைகள் இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்!

நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை
இனி பார்ப்பது கூட
கடவுளைப் பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்!

ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனிவரும் நாட்களில் எல்லாம்
எல்லாருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும்!

இப்படி... புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடக்கி விட்டேன்...
இன்று என் இதயம் ஒரு வெற்றுக் காகிதம்!








All the contents on this site are copyrighted ©.