2011-12-30 15:32:07

வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்திற்கு வயது ஐம்பது


டிச.30,2011. தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியிலுள்ள ஆரோக்ய அன்னை திருத்தலம், பசிலிக்கா நிலைக்கு உயர்த்தப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, 2012ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் திருநற்கருணை ஆராதணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“கீழை நாடுகளின் லூர்து” என்றழைக்கப்படும் வேளாங்கண்ணி ஆரோக்ய அன்னை திருத்தலத்தை, அருளாளர் திருத்தந்தை 23ம் ஜான், 1962ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி பசிலிக்கா நிலைக்கு உயர்த்தினார்.
இந்த வேளாங்கண்ணி பசிலிக்காவை, அருளாளர் திருத்தந்தை 2ம் ஜான் பால், 2002ம் ஆண்டில், “கீழை நாடுகளின் லூர்து” என்றழைத்தார்.
இந்தப் பொன்விழா பற்றி ஆசியச் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த அப்பசிலிக்கா அதிபர் அருட்பணி ஏ.மைக்கிள், இந்த ஜூபிலி ஆண்டைக் கொண்டாடும் விதமாக, “விடியற்கால விண்மீன்” என்ற பெயரில் புதிய, பெரிய ஆலயம் கட்டத் தீர்மானித்திருப்பதாகக் கூறினார்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இடம் பெற்ற சுனாமியின் போது வேளாங்கண்ணியில் சுமார் 850 பேர் இறந்தனர், 300 பேர் ஆழிப்பேரலைகளில் அடித்துச் செல்லப்பட்டனர், ஆயினும், இந்தப் பசிலிக்காவில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.