2011-12-30 15:22:28

டிச 31. வாழ்ந்தவர் வழியில்....... தொ. மு. சிதம்பர இரகுநாதன்


திருநெல்வேலியில் அக்டோபர் 20, 1923ம் ஆண்டு பிறந்தார் எழுத்தாளர் இரகுநாதன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான ‘புயல்’ 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் ‘பஞ்சும் பசியும்’ என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954 முதல் 56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர இராமசாமி, ஜெயகாந்தன், கி. இராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். 1960ல் சோவியத் பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய இரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவரது இலக்கிய விமர்சன நூலான ‘பாரதி - காலமும் கருத்தும்’ 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் ‘இளங்கோ அடிகள் யார்’ என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 2001ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி பாளையங்கோட்டையில் காலமானார் எழுத்தாளர் தொ. மு. சிதம்பர இரகுநாதன்.








All the contents on this site are copyrighted ©.