2011-12-30 15:31:53

2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்


டிச.30,2011. ஆசியாவில் நான்கு பேர் உட்பட உலகளாவியத் திருச்சபையில், 2011ம் ஆண்டில் 26 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று Fides செய்தி நிறுவனம் அறிவித்தது.
2011ம் ஆண்டில் தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்காகக் கொடூரமாய்க் கொல்லப்பட்ட ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்ட Fides செய்தி நிறுவனம், இவ்வாண்டில் 18 அருட்பணியாளர்கள், நான்கு அருட்சகோதரிகள் மற்றும் 4 பொதுநிலை விசுவாசிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அக்கண்டத்தில் 13 அருட்பணியாளர்களும் 2 பொதுநிலை விசுவாசிகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகிறது.
ஆப்ரிக்காவில் 2 அருட்பணியாளர்கள், 3அருட்சகோதரிகள் மற்றும் ஒரு பொதுநிலை விசுவாசியும், ஆசியாவில் 2 அருட்பணியாளர்கள், ஓர் அருட்சகோதரி மற்றும் ஒரு பொதுநிலை விசுவாசியும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தும்கா நகருக்கு அருகில் கடந்த நவம்பர் 15ம் தேதி இரவு அருட்சகோதரி வல்சா ஜான் கொடூரமாய்க் கொல்லப்பட்டார். இச்சகோதரி கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியின் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர் நலனுக்காக வேலை செய்து வந்தவர்.
2010ம் ஆண்டில் அகில உலகத் திருச்சபையில் 25 மேய்ப்புப்பணியாளர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாண்டில் இவ்வெண்ணிக்கை அதிகரித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.