2011-12-29 14:52:24

ஒவ்வோர் ஆண்டும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 22,000


டிச.29,2011. உலகின் பல நாடுகளில் பணியாற்றும் 21 கோடியே 50 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்களில் 11 கோடியே 50 இலட்சம் குழந்தைகள் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் சூழல்களில் பணி புரிகின்றனர் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
கல்வி மற்றும் கலை வழியாக குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள SCREAM என்ற திட்டத்தின் 8வது அறிக்கையைச் சமர்ப்பித்த ILO எனப்படும் உலக உழைப்பாளர் அமைப்பு ஸ்பெயின் நாட்டின் Madrid நகரில் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நோயுற்றும், விபத்துக்களுக்கு உள்ளாகியும் இறக்கும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் 22,000க்கும் அதிகம் என்று கூறும் இவ்வறிக்கை, தொழில் தொடர்பான விபத்துக்களில் இறக்கும் வயது வந்தோரின் எண்ணிக்கையை விட இவ்வாறு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளது.
2010ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர்கள் குறித்து Hague நகரில் நடைபெற்ற உலகக் கருத்தரங்கில், உலகினின்று 2016ம் ஆண்டுக்குள் குழந்தைத் தொழிலை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.