2011-12-29 14:51:46

ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியத் திருச்சபை வரவேற்பு


டிச.29,2011. ஊழலை ஒழிக்கும் சட்ட வரைவின் மீது இந்தியப் பாராளுமன்றத்தில் இப்புதனன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியத் திருச்சபைத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
1968ம் ஆண்டு முதல் பல்வேறு பாராளுமன்ற அவைகளின் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வரும் இந்த சட்ட வரைவு, தற்போது பாராளுமன்றத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது ராஜ்ய சபாவிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் சட்டமாக அமல்படுத்தப்படும்.
42 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தற்போது பலன்களைத் தந்துள்ளது என்பது இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று மனித உரிமை ஆர்வலரும் இயேசு சபை குருவுமான செட்ரிக் பிரகாஷ் கூறினார்.
ஊழல் என்பது இந்திய சமுதாயத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பதால், இதனை ஒழிப்பது வெறும் சட்டத்தால் மட்டும் முடியாது எனினும் இது சிறந்ததொரு ஆரம்ப முயற்சி என்று அருள்தந்தை பிரகாஷ் எடுத்துரைத்தார்.
இந்திய அரசின் இந்த முயற்சியை பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.