2011-12-28 15:50:17

வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்கமுடியாது - பாகிஸ்தான் அமைச்சர்


டிச.28,2011. பாகிஸ்தானில் வறுமையையும், அறியாமையையும் நீக்காவிடில், மதம் சார்பான வன்முறைகளையும் நீக்க முடியாது என்று பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறினார்.
மதங்களுக்கிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சராக செயலாற்றும் பால் பாட்டி, அண்மையில் L'Osservatore Romano செய்தித்தாளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறினார்.
தேவநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டு பாகிஸ்தான் சிறையில் உள்ள ஆசியா பீபி உட்பட அனைத்து கைதிகளையும் அண்மையில் சந்தித்து உரையாடிய பால் பாட்டி, இக்கைதிகள் அனுபவித்து வரும் உடல் மற்றும் உள்ள ரீதியான வேதனைகள் பற்றி இச்செய்திதாளுக்கு எடுத்துரைத்தார்.
பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துறையில் அமைச்சராகப் பணியாற்றிய Shahbaz Bhatti கிறிஸ்மஸ் காலத்தில் சிறைக் கைதிகளைச் சந்தித்ததைப் போல், தானும் சென்று சந்தித்ததாகக் கூறிய பால் பாட்டி, மக்களிடம் உள்ள அறியாமையைப் பயன்படுத்தி அடிப்படைவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் வெறுப்பை வளர்த்து வருகின்றன என்பதைச் சுட்டிக் காட்டினார்.
மக்கள் கல்வியில் முன்னேறி, வறுமையை ஒழிக்கும் வழிகளைக் கண்டுகொண்டால், அவர்களிடையே உள்ள அடிப்படைவாத உணர்வுகளும் நாட்டிலிருந்து நீங்கும். இதைத் தொடர்ந்து, நாட்டில் தேவநிந்தனை குறித்த சட்டத்தையும் நீக்க முடியும் என்று பால் பாட்டி நம்பிக்கை தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.