2011-12-28 15:35:15

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்.


டிச 28, 2011. வழக்கமான கிறிஸ்மஸ் கால குளிர் இல்லையெனினும், ஓரளவு குளிருடனேயே துவங்கிய இப்புதன், நேரம் செல்லச் செல்ல சூரியக் கதிர்களால் இதமான வெப்பத்தைப் பெற்று, உரோம் நகர் திருப்பயணிகளுக்கு நல்லதொரு காலநிலையை வழங்கிக் கொண்டிருக்க, திருத்தந்தை 6ம் பவுல் மண்டபத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் புதன் பொது மறைபோதகத்தையொட்டி சந்தித்த திருத்தந்தை, நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் வாழ்வில் செபத்தின் இடம் குறித்து எடுத்துரைத்தார்.
இக்கிறிஸ்மஸ் பெருவிழாக் காலத்தில் நாசரேத்தூர் திருக்குடும்பத்தின் வாழ்வில் செபத்தின் இடம் குறித்து தியானிக்க, செபம் குறித்த நம் புதன் மறைபோதகம் இன்று நம்மை அழைத்துச் செல்கிறது. கிறிஸ்துவின் விசுவாசமுடைய சீடர்களாக வளரவும் இறைப்பிரசன்ன மறையுண்மை குறித்து ஆழ்ந்து தியானிக்கவும் நாம் இயேசு மரி மற்றும் யோசேப்பின் வீட்டில் கற்றுக் கொள்கிறோம். கிறிஸ்துவின் வாழ்வு மறையுண்மைகளைத் தியானித்து செபிப்பதில் மிக உயரிய எடுத்துக்காட்டாக அன்னை மரியை நமக்குக் காட்டுகின்றன நற்செய்தி நூல்கள். நாமும் செபமாலையை செபிக்கும்போது, அதே மறையுண்மைகள் குறித்த அன்னை மரியின் ஆழ்தியானத்தில் நம்பிக்கை மற்றும் விசுவாசத்துடன் நம்மையும் இணைக்கிறோம். வேலையிலும் செபத்திலும் இறைச்சட்டங்களைக் கடைபிடிப்பதிலும் பற்றுமாறா உறுதிப்பாட்டுடன் செயல்படவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இயேசுவுக்கு கற்பித்ததன் வழி திருக்குடும்பத்தின் தந்தையெனும் தனக்குரிய அழைப்பை நிறைவுச் செய்தார் புனித யோசேப்பு. வானகத் தந்தையுடன் இயேசு கொண்டிருக்கும் தன்னிகரில்லா உறவு, திருக்குடும்பத்தின் செபவாழ்வில் பிரதிபலித்தது மற்றும் அனைத்துக் கிறிஸ்தவ செபத்தின் இதயமாகவும் உள்ளது. அனைத்துக் கிறிஸ்தவக் குடும்பங்களும் செபத்தின் கல்விக்கூடங்களாக விளங்க திருக்குடும்பத்தின் எடுத்துக்காட்டு தூண்டுவதாக. இந்த கல்விக்கூடங்களிலேயே பெற்றோர்களும் குழந்தைகளும் இறைவனின் அருகாமையைக் கண்டு கொள்கிறார்கள். அதையே கிறிஸ்மஸின் இந்நாட்களில் நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.
இவ்வாறு, 2011ம் ஆண்டின் இறுதிப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.