2011-12-28 15:36:46

டிசம்பர் 29. வாழ்ந்தவர் வழியில்........ தாமஸ் பெக்கட்


ஒரு செல்வமிக்க வியாபாரக் குடும்பத்தில் 1118ம் ஆண்டு இலண்டனில் பிறந்தார் தாமஸ் பெக்கட். கான்டர்பரி பேராயர் இல்ல அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மன்னர் இரண்டாம் ஹென்றியால் தேர்வு செய்யப்பட்டு அரசவையில் உயர் பதவியில் அமர்த்தப்பட்டார். மன்னரின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவராக மாறிய தாமஸ் பெக்கட்டை, 1162ல் கான்டர்பரி பேராயராக நியமித்தார் மன்னர். சுகபோக வாழ்வை இதுவரை வாழ்ந்து வந்த அவரை, அதுவும் குருவாகக்கூட இல்லாத ஒருவரை பேராயராக பெரிய பதவியில் அமர்த்துவதை தலத்திருச்சபை அதிகாரிகள் பலர் எதிர்த்தனர். ஆனால், பேராயராகப் பதவியேற்ற நாளிலிருந்தே தாமஸ் பெக்கட்டின் போக்கில் பெருமாற்றம் ஏற்பட்டது. ஏழைகள்பால் மிகுந்த அன்பு கொண்டவராக விளங்கினார். தினமும் காலையில் தன் வீட்டில் 13 ஏழைகளை வரவேற்று அவர்களின் கால்களைக் கழுவி, அவர்களுக்கு உணவு பரிமாறி, பொருளுதவியும் அளித்தார். ஒரு துறவிக்குரிய எளிமையான ஆடைகளையே அணிந்தார். தனக்குப் பெரும் உதவியாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் மன்னரால் நியமிக்கப்பட்ட பேராயர் பெக்கட், பல விடயங்களில் திருச்சபையின் சார்பாக நின்று, மன்னரை எதிர்த்தார். மன்னரின் கோபத்திற்கு அஞ்சி இவர் 6 ஆண்டுகள் பிரான்சில் தலைமறைவு வாழ்க்கை வாழவேண்டியிருந்தது. 1170ம் ஆண்டு திரும்பி வந்த இவரை, மன்னருக்கு விசுவாசமாக இருந்த நான்குபேர் சூழ்ந்து கொண்டு, பேராலயத்திலேயே வெட்டிக் கொன்றனர். 1170ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி மறைசாட்சியாக உயிரிழந்த இவர், 1173ம் ஆண்டு திருச்சபையால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.