2011-12-28 15:42:57

கிறிஸ்மஸ் பெருவிழாவையொட்டி, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் அனுப்பியுள்ள செய்தி


டிச.28,2011. 'விடுதியில் அவர்களுக்கு இடமில்லை' என்று விவிலியத்தில் கூறப்பட்டுள்ள நிலையை சந்தித்து வரும் பலர் இன்றும் நம் மத்தியில் உள்ளனர்; அவர்கள் மத்தியில் இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கைச் செய்தியைத் தருவதே கிறிஸ்மஸ் பெருவிழா என்று புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் தேயோபிலஸ், இலத்தீன் ரீதி முது பெரும் தலைவர் Fouad Twal, காப்டிக் ஆர்த்தடாக்ஸ் ரீதி முதுபெரும் தலைவர் பேராயர் Anba Abraham, உட்பட 13 தலைவர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கிறிஸ்மஸ் செய்தியில் 'உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!' என்ற கிறிஸ்மஸ் விழாவின் மையமான வார்த்தைகளை மக்களுக்கு மீண்டும் நினைவுறுத்தியுள்ளனர்.
புனித பூமியில் பல்வேறு பிரிவினைகளால் இன்றும் தங்கள் சொந்த நாட்டிலேயே அன்னியராக நடத்தப்படும் மக்களுடன் தலத்திருச்சபைகளின் தலைவர்களாகப் பணியாற்றும் நாங்கள் அனைவரும் இணைந்து, எங்கள் செபங்களை இறைவனிடம் சமர்ப்பிக்கின்றோம் என்று அத்தலைவர்கள் கூறியுள்ளனர்.
நீதி, மற்றும் ஒப்புரவு இவற்றின் அடிப்படையில் கட்டி எழுப்பப்படும் அமைதியை, தலைவர்களாகிய நாங்களும், மக்களும் தேடி வருகிறோம் என்று, புனித பூமியில் உள்ள கத்தோலிக்கத் தலைவர்கள் தங்கள் கிறிஸ்மஸ் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.