2011-12-28 15:51:25

இந்தியாவின் நாட்டுப் பண் 'ஜன கண மன'வுக்கு நூறு வயது


டிச.28,2011. இந்தியாவின் நாட்டுப் பண்ணாக விளங்கும் 'ஜன கண மன'வுக்கு நூறு வயதாகிறது. சரியாக நூறு வருடங்களுக்கு முன்பு 1911ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தேழாம் தேதி கொல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தொடரில்தான் இந்தப் பாடல் முதன்முதலில் பாடப்பட்டது.
இலக்கியத்துக்காக நோபெல் பரிசு வென்ற முதல் ஆசியரான மகாகவி இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய இப்பண், பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு, இந்தியாவின் நாட்டுப் பண்ணாக உருவெடுத்தது. இதனை நாட்டுப் பண்ணாக ஏற்க மறுத்த பலர், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்ற பாடலைத்தான் நாட்டுப் பண்ணாக அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
ஆனாலும், மஹாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் ஆதரவு காரணமாக 'ஜன கண மன' நாட்டுப் பண்ணாகவும் 'வந்தே மாதரம்' நாட்டுப் பாடலாகவும் அறிவிக்கப்பட்டன என்று வரலாற்று குறிப்புகள் அமைந்துள்ளன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி இந்திய நாட்டுப் பண்ணாக, தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் பெற்று 65 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இந்தப் பாடல் பற்றிய அரசியல் சர்ச்சைகள் தொடருகின்றன. 'ஜன கண மன'வின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலாச்சார அமைப்பொன்று ஏற்பாடு செய்த வேளையில், இந்தியாவின் வட கிழக்குப் பகுதி இந்தப் பாடலில் இருந்து விடுபட்டுள்ளது, அதனையும் இப்பாடல் வரிகளில் சேர்க்க வேண்டுமென அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து குரல்கள் ஒலித்துள்ளன.
அவ்வப்போது புதிய தலைமுறையின் இரசனைக்கு ஏற்ப, புதுப்புது இசை வடிவம் பெற்று இப்பாடல் வலம் வருகின்றது. முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை வடிவத்தில் இப்பாடல் இடம்பெற்றிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.