2011-12-28 15:47:26

அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும்


டிச.28,2011. அடுத்த ஆண்டு முதல் ஈராக்கின் Kirkuk நகரில் டிசம்பர் 25 கிறிஸ்மஸ் நாள் ஒரு விடுமுறையாகக் கடைபிடிக்கப்படும் என்று அந்நகர ஆளுநர் கூறினார்.
Kirkuk நகரின் பேராலயத்தில் கல்தேய ரீதி ஆயர் லூயிஸ் சாக்கோ நிறைவேற்றிய கிறிஸ்மஸ் திருப்பலியில் கலந்து கொண்ட Kirkuk நகர ஆளுநர் Najim al-din Umar Karim, அங்கு கூடியிருந்த அனைவர் முன்னிலையிலும் இந்த முடிவை வெளியிட்டார்.
மேலும் கிறிஸ்மஸ் பெருவிழாவை ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்கும்படி தான் ஈராக் மத்திய அரசிடம் விண்ணப்பம் செய்யவிருப்பதாகவும் நகர ஆளுநர் Karim கூறினார்.
ஈராக்கில் பல ஆண்டுகளாக நிலவி வரும் போர்ச்சூழல் நீங்கி அனைவரும் ஒற்றுமையில் வாழ்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதன் ஓர் அடையாளமாக, கிறிஸ்மஸ் திருநாள் அன்று Kirkuk நகர ஆளுநர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பேராலயத்திற்குச் சென்று ஆயர் சாக்கோவுக்கும் மக்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.
பேராலயத்திற்கு வந்திருந்த மக்களுக்கு தன் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த நகர ஆளுநர் Karim, போர்ச்சூழல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள 6 இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்பும்படி அழைப்பு விடுத்தார்.
கிர்குக் ஆயர் லூயிஸ் சாக்கோ கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே ஒப்புரவை உருவாக்க பாடுபடுவதை பாராட்டிப் பேசிய ஆளுநர், கிறிஸ்தவர்கள் ஈராக் நாட்டிற்கு செய்து வரும் பல்வேறு முக்கியமான பணிகளையும் புகழ்ந்து பேசினார்.







All the contents on this site are copyrighted ©.