2011-12-27 13:37:00

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 100


அன்பார்ந்தவர்களே! இன்று நாம் சிந்திப்பது திருப்பாடல் 100. திருக்கோவிலுக்கு பவனியாகச் சென்ற இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றதையும், எருசலேம் கோவில் மீண்டும் கட்டப்பட்டதையும் மனதில் கொண்டு யாவே இறைவனுக்கு நன்றியாகப் பாடியதுதான் இத்திருப்பாடல் என விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரயேல் மக்களை உண்டாக்கி, உயிரளித்த யாவே இறைவன் அவர்களைப் பாதுகாக்கவும் செய்தார். மக்களைப் பாதுகாக்கும் பணி அரசருடையது. அரசருடையப் பணியை யாவே இறைவன் செய்தார். அவர் தேர்ந்தெடுத்த அரசர் வழியாக அவர்களைப் பாதுகாத்து வந்தார். எனவே யாவே இறைவனே அவர்களின் அரசர் என இஸ்ரயேல் மக்கள் மனங்களில் ஆழப்பதிந்து விட்டது. இஸ்ரயேலை அரசர்கள் ஆண்ட போதிலும், அரசு வீழ்த்தப்பட்ட போதும் மக்கள் மனங்களில யாவே இறைவன் மாபெரும் அரசராக நீங்கா இடம் பெற்றார்.
அன்பார்ந்தவர்களே! இஸ்ரயேல் மக்களின் மனதில் யாவே இறைவன் எவ்வளவு ஆழமாக நீங்கா இடம் பெற்றிருந்தார் என்பதை அறிய இத்திருப்பாடலில் பயன்படுத்தப்படும் சில சொற்றொடர்களின் பொருள்களை அறிவது மிக அவசியம்.
திருப்பாடல் 100: 3.
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
முதலில் ‘ஆண்டவரே கடவுள்’ என்பதை எடுத்துக் கொள்வோம்.

யாவே இறைவனுடைய கைவன்மையை உடனிருந்து உணர்ந்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். பாரவோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன் என்று சொன்னார். அதே போலச் செய்து காட்டினார். பாபிலோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன் என்று சொன்னார். அதே போலச் செய்து காட்டினார். இவ்வாறு யாவே இறைவன், சொல்வதைச் செய்து காட்டும் வல்ல தெய்வமாக அவர்களின் மனங்களில் உயர்ந்து நின்றார். அவர்களைச் சுற்றி வாழும் அரசர்களையும், தெய்வங்களையும் விட யாவே இறைவன் வல்லவர் என நன்கு உணர்ந்திருந்தனர். எனவே இஸ்ரயேல் மக்களுக்கு யாவே இறைவன்தான் கடவுள். தங்களுக்கு மட்டுமல்ல மாறாக இவ்வுலகில் வாழும் எல்லா மக்களுக்கும் அவரே கடவுள் என்றுதான் நினைத்தனர்.
இரண்டாவதாக, ‘நாம் அவர் மேய்க்கும் ஆடுகள்’ என்பதைப் பார்ப்போம்.
யாவே இறைவன் அவர்களை ஒரு குறையுமின்றி காத்து வந்தார். அவர்களுக்குத் தேவையானதனைத்தையும் செய்து வந்தார். நீர் எங்களை படைத்த ஆண்டவர் மட்டுமல்ல. படைத்து அப்படியே விட்டுவிடவில்லை. ஒரு ஆயனைப் போல இருந்து எங்களைக் காத்து வருகிறீர். நாங்கள் உமது ஆடுகள். உமது மேய்ச்சலில் நாங்கள் செழிப்பாக இருக்கிறோம் என்று அவர்களை அவர் பேணிக்காக்கும் அழகை அழகான உவமை வழியாகச் சொல்கின்றனர்.
அடுத்ததாக, திருப்பாடல் 100: 5.
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.
இதில், ‘என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு’ என்பதைச் சிந்திப்போம்.

அரசர் என்று சொன்னாலே ஆட்சி செய்வது, போர் செய்வது என்ற அதிகாரத் தோரணைதான் நினைவுக்கு வரும். இஸ்ரயேல் மக்களைச் சுற்றி வாழ்ந்த அரசர்களும் ஆட்சி, அதிகாரம் மற்றும் தண்டனை போன்றவற்றிற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் யாவே இறைவனோ, மற்ற அரசர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்பதாகப் பார்த்தனர். இரக்கம், கனிவு, மன்னிப்பு, அன்பு என்று இஸ்ரயேல் மக்களைக் கவர்ந்திருந்தார். சில சமயங்களில் பிற தெய்வங்களையும், பிற இனத்தாரையும் நம்பி யாவே இறைவனை விட்டு அவர்கள் விலகிச் சென்றாலும் இறைவனோ ஒரு போதும் அவர்களை விட்டு நீங்கியதில்லை. மிகப்பெரிய குற்றம் செய்த போதிலும் மன்னித்து ஏற்றுக் கொண்டார். அவர்களைத் தன் சொந்தப் பிள்ளைகளாக அன்பு செய்தார். இந்த அன்பின் மிகுதியை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். எனவேதான் ‘என்றும் உள்ளது அவரது பேரன்பு’ என பழைய ஏற்பாட்டு புத்தங்களில் அடிக்கடி எழுதப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது.
அன்பார்ந்தவர்களே! பழைய ஏற்பாட்டைப் போன்று புதிய ஏற்பாட்டிலும் அரசு பற்றிப் பேசப்படுகிறது. முதல் மூன்று நற்செய்திகளுமே இறையரசு, விண்ணரசு பற்றி நிறையவே பேசுகின்றன. இறையரசின் ஒப்பற்ற அரசராகத் திகழ்பவர் இயேசு என்பது வெள்ளிடைமலை. பழைய ஏற்பாட்டில் யாவே இறைவன் உடன்படிக்கையின் தெய்வமாக இருந்தது போல புதிய ஏற்பாட்டிலும், இன்றும் இயேசு நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.
யோவான் நற்செய்தி 6: 15
அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
மத்தேயு நற்செய்தி 2;:2
யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.
மத்தேயு நற்செய்தி 21:7,8 மற்றும் 9
அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.
பெருந்திரளான மக்கள் தங்கள் மேல் உடைகளை வழியில் விரித்தார்கள். வேறு சிலர் மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி வழியில் பரப்பினர்.
அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் இயேசு இன்றும் அரசராக மக்கள் மனங்களில் வாழ்கிறார் என்பது உலகறிந்த உண்மை. அரசன், ஆளுமை என்ற அதிகாரத் தோரணையில்லாமல் எளிமையின் அரசராக, தியாகத்தின் அரசராக, மன்னிப்பின் அரசராக, இரக்கத்தின் அரசராக மக்கள் மனதில் குடிகொண்டிருக்கிறார்.
இறைவனின் திருமகனான இயேசு நம்மைப்போல மனிதக்கோலம் பூண்டு நமக்காக இந்த பூமிக்கு வந்தார். அதைத்தான் நாம் இந்த கிறிஸ்மஸ் காலத்தில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இறைவனின் பேரன்பு என்றும் உள்ளது என்பதற்கு இறைமகன் இயேசுவின் இம்மண்ணகப் பிறப்பே மிகப் பெரிய சான்று.
இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனைப் புகழ்ந்து பாடிய திருப்பாடலைத்தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாமும் தந்தையாம் இறைவனையும், இறைமகன் இயேசுவையும் புகழ்ந்து பாடவேண்டும்.
அன்பார்ந்தவர்களே! நாம் எப்போது மனிதர்களைப் புகழ்கிறோம்? நல்ல மதிப்பீடுகளை அவர்கள் வாழ்ந்து காட்டும்போது வானளவு வாழ்த்துகிறோம். இதனடிப்படையில் நாம், இறைவனைக் கண்டிப்பாகப் புகழ்ந்தாக வேண்டும். ஏனெனில் அவர் மதிப்பீடுகளின் ஊற்று. நாம் சிந்திக்க, பேசுகின்ற எல்லா மதிப்பீடுகளையும் இயேசு வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
அப்படிப்பட்ட இறைவனை நாம் எப்படி புகழ்ந்து பாடுவது? புகழ்ந்து பாடுவது மட்டும் போதுமா? என்பதற்கும் இத்திருப்பாடலிலேயே பதில் காணக்கிடக்கின்றது.
திருப்பாடல் 100:2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்!

இங்கே ‘ஆண்டவரை வழிபடுங்கள்’ என்றால் பணிபுரியுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமென விவிலிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர். யாவே இறைவன் மாபெரும் அரசர். அவர் நமக்காக பல அதிசயங்களைச் செய்திருக்கிறார். எனவே வாருங்கள் அவருக்கு பணிபுரிவோம் என்று அழைப்பு விடுக்கின்றனர்.
அடுத்ததாக ‘அவர் திருமுன் வாருங்கள்’ என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. புதிதாக கட்டியெழுப்பியுள்ள ஆலயத்திற்கு வாருங்கள் ஏனெனில் அங்கேதான் அவர் வாழ்கிறார். அவரது பிரசன்னத்திலிருந்து அவரைப் புகழவேண்டும் என்று அழைக்கின்றனர்.
இசைக் கருவிகளோடு வந்து பாடினால்தான் அது புகழ்ச்சி என்று அர்த்தமல்ல. மாறாக. எங்கிருந்தாலும் இறைவன் செய்த நன்மைகளை நினைத்து “இறைவா உமக்கு நன்றி” என்று சொல்வதும் புகழ்ச்சிதான். இஸ்ரயேல் மக்களைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் சந்நிதிக்கு வந்து அவரைப் புகழ்வதும் தகுதியும் நீதியும் ஆகும். தனியாக இருக்கும் போது செபமோ அல்லது நன்றிமன்றாட்டோ அல்லது திருப்பாடல்களோ இறைவனைப் புகழ்வதற்கு ஏற்றவை. குழுவாக இருக்கும்போது பாடல்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறு இறைவன் செய்த நன்மைகளுக்காய் அவரைப் புகழ பலவித வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு, நாம் புகழும் போது நம் உடல், உள்ளம், உயிர் அனைத்தும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்.
யாவே இறைவன் இஸ்ரயேல் மக்களின் மனதைத் தொட்டார். அவர்களுக்கு எல்லாமுமாய் இருந்தார். இதை அனுபவித்து உணர்ந்தனர். எனவே அவரைப் புகழ்ந்து பாடாமல் அவர்களால் இருக்க முடியவில்லை. அதே போல, அவரிடமிருந்து எண்ணற்ற கொடைகளைப் பெற்ற நாம் அவரைப் புகழ்வதே கடைமையும் நீதியும் ஆகும். இறைவனைப்புகழ்வதால் அவரது மாட்சிமை ஏற்றம் பெறாது எனினும் இறைவன் நமக்குச் செய்தவற்றை பிறருக்கு எடுத்துச் சொல்ல நாம் கடைமைப் பட்டிருக்கிறோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இறைவன் நமக்குச் செய்தவற்றைப் பிறருக்குச் சொல்ல வேண்டும். அவ்வாறு பலரிடம் சொல்லும் போது, நமக்கேத் தெரியாமல் அந்த நற்குணங்கள் நம் மனதில் ஆழமாகப் பதிகின்றன. நாளடைவில், நாமும் ஏன் அதே போல இருக்கக்கூடாது என்ற கேள்வியானது நம் மனதில் எழுகின்றது. பிறகு, அந்த நற்குணங்களைச் செயல்படுத்த ஆரம்பிக்கிறோம். எனவே வாருங்கள், நாமும் அவர் செய்த நன்மைகளுக்காய் அவரைப் போற்றிப் புகழ்வோம்.








All the contents on this site are copyrighted ©.