2011-12-26 13:59:43

புனித ஸ்தேவான் திருநாளன்று திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை


டிச.26,2011. கிறிஸ்மஸ் பெருவிழாவைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த நாள் திருச்சபையில் சிறப்பிக்கப்படும் முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவான் குறித்த சிந்தனைகளை இத்திங்கள் மூவேளை செப உரையில் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
‘ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராக மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார்’ எனத் திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசியத் திருத்தந்தை, ஸ்தேவான் என்ற பெயருக்கு 'மணிமகுடம்' என்ற பொருள் உண்டு என்பதையும் சுட்டிக் காட்டினார்.
தன்மீது கல்லேறிந்தபோது ஸ்தேவான், ‘ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்’ என்று வேண்டிக் கொண்டபின் முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ‘ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்’ என்று சொல்லி உயிர்விட்ட நிகழ்வையும் தன் மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை.
காலம் காலமாக மறைசாட்சிகள் திருச்சபை நன்னெறிகளின் ஆசிரியர்களாக, வாழும் சாட்சிகளாக, உயிருள்ள தூண்களாக, அமைதித் தூதர்களாக போற்றப்பட்டு வருகின்றார்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.
மூவேளை செப உரையின் இறுதியில், இவ்வுலகில் அமைதி, மற்றும் நீதியின் ஆட்சி தழைக்க செபிக்குமாறும் அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, நைஜீரியாவில் கிறிஸ்மஸ் நாளன்று கோவில்கள் தாக்கப்பட்டது குறித்து தன் ஆழ்ந்த கவலையை எடுத்துரைத்தார்.
பாதிக்கப்பட்டோருடன் தன் ஒருமைப்பாட்டையும், அருகாமையையும் வெளியிட்டதுடன், துன்பங்களையும், அழிவுகளையும், மரணத்தையும் கொண்டு வரும் வன்முறைகளைக் கைவிட்டு, அமைதியை நோக்கிச் செல்லும் அன்பு, மதிப்பு மற்றும் ஒப்புரவின் வழிகளைக் கைகொள்ளுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.