2011-12-26 14:00:10

நைஜீரிய கோவில் தாக்குதல் குறித்து திருப்பீடம் கவலை


டிச.26,2011. நைஜீரியாவின் அபுஜா நகர் புனித தெரேசா கோவில் வெடிகுண்டால் தாக்கப்பட்டு பலர் பலியாகியுள்ளது குறித்து திருச்சபையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
மனித உயிர்கள் மீது எவ்வித மதிப்புமற்ற வகையில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டோருடனும், தலத்திருச்சபையுடனும் அகில உலகத்திருச்சபை தன் அருகாமையைத் தெரிவிக்கிறது என்று கூறிய திருப்பீடப் பேச்சாளர், அமைதியின் மகிழ்வைக் கொணரும் இக்கிறிஸ்மஸ் காலத்தில் இத்தகைய தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.
பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காக செபிக்கும் அதே வேளை, இத்தைகைய தாக்குதல்கள் மீண்டும் இடம்பெறாதிருக்கவும், அந்நாட்டில் இடம்பெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாதிப்படையாமல் தொடரவும் ஆவல் கொள்வோம் என மேலும் தெரிவித்தார் இயேசு சபை குரு லொம்பார்தி.
நைஜீரியாவின் அபுஜா புனித தெரேசா கோவிலில் கிறிஸ்மஸ் திருப்பலியின்போது இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் அந்நாட்டின் ஜோஸ் நகரின் கோவிலும் வெடிகுண்டால் தாக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.