2011-12-26 14:07:29

டிசம்பர் 27 வாழ்ந்தவர் வழியில் .... தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ்


தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் (Thomas William Rhys Davids) பிரித்தானியாவைச் சேர்ந்த பாளி மொழி அறிஞராவார். பாளி நூற் கழகத்தைத் (Pali Text Society) தொடங்கி வைத்தவரும் இவரே. இலத்தீன் மொழியைச் சிறப்பாகக் கற்ற இவர், நிர்வாகப் பணியில் சேர விரும்பி, ஜெர்மனியிலுள்ள பிரெஸ்லோவில் (Breslau) சமஸ்கிருதம் படித்தார். 1863 ம் ஆண்டு இங்கிலாந்து திரும்பிய இவர், நிர்வாகப்பணித் தேர்வு எழுதி அதில் வெற்றியும் பெற்றார். இவருக்கு இலங்கையில் குற்றவியல் நீதிபதியாகப் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. அச்சமயத்தில் காலி நகரத்தில் இவரிடம் விசாரணைக்கு வந்த வழக்கொன்றில் முன்வைக்கப்பட்ட ஆவணம் ஒன்றின் மூலம் பாளி மொழி பற்றி அறிய வந்தார். அக்காலத்தில் இலங்கையின் ஆளுனராக இருந்த சர் ஹெர்குலெஸ் இராபின்சன் (Hercules Robinson) 1868 ம் ஆண்டில் தொல்லியல் கமிஷனை உருவாக்கியிருந்தார். இதன் மூலம் இலங்கையின் பண்டையத் தலைநகரமான அநுராதபுரத்தில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாய்வுகளில் ரைஸ் டேவிட்ஸ் ஆர்வம் காட்டிவந்தார். கல்வெட்டுக்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் சேகரித்து வந்த இவர், 1870-1872ம் காலப் பகுதியிலிருந்து பிரித்தானிய ஆசியக் கழகத்தின் இலங்கைக் கிளையின் இதழ்களில் அவை பற்றிக் கட்டுரைகளும் எழுதினார். இக்காலத்தில் சிங்களத்தையும் கற்றுக்கொண்ட ரைஸ் டேவிட்ஸ், உள்ளூர் மக்களுடன் நெருக்கமாகப் பழகி வந்தார். ரைஸ் டேவிட்ஸ், 1882 ம் ஆண்டிலிருந்து 1904ம் ஆண்டுவரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் பாளி மொழிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இங்கிலாந்தில், தேரவாத பௌத்தம் மற்றும் பாளி தொடர்பான துறையை வளர்ப்பதில் பல வழிமுறைகளைக் கையாண்டார். பிரித்தானிய ஆசியக் கழகத்தின் துணையுடன், இந்திய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் கல்விக்குப் பிரித்தானிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று வாதிட்டு வந்தார். இந்தியாவில் பிரித்தானியாவின் பிடியை வலுவாக வைத்திருப்பதற்கு இது எவ்வாறு உதவும் என்பதற்கான பல்வேறு காரணங்களை எழுத்து மூலமாகவும், விரிவுரைகள் வழியாவும் முன்வைத்தார். 1843 ம் ஆண்டு மே 12ம் தேதி பிறந்த தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், 1922 ம் ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.