2011-12-23 15:17:27

டிச 24, 2011. வாழ்ந்தவர் வழியில் .... எம். ஜி. இராமச்சந்திரன்


எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பிறந்தார். வக்கீலாக கேரளாவில் பணிபுரிந்த அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனனின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்பச் சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடகத்துறையில் நன்கு அனுபவம் பெற்ற பின் திரைப்படத்துறைக்குச் சென்றார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. நடிப்பதோடு நின்று விடாமல் திரைப்பட இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் எம்.ஜி.ஆர் செயலாற்றினார்.
1972 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்று, தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரச்சாரத்திற்கே செல்லாமல் முதலமைச்சர் ஆனவர் எம்.ஜி.ஆர் ஒருவரே. 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அமல் படுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்து, பதவியிலிருக்கும் போதே 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.