2011-12-23 15:26:10

இந்தியாவில் சாலை விபத்துக்கள் தடுத்து நிறுத்தக்கூடியவையே


டிச.23,2011. இந்தியாவில் தடுத்து நிறுத்தக்கூடிய ஆபத்தான நலவாழ்வு பிரச்சனைகள் போன்று சாலை விபத்துக்களும் தடுத்து நிறுத்தக்கூடியவையே எனவும், சாலைவிதிகளைக் கடைப்பிடித்தல் அதிகமாக வலியுறுத்தப்பட வேண்டுமெனவும் ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
உலக அளவில் சாலை விபத்துக்களால் ஆண்டுதோறும் 12 இலட்சம் பேர் இறக்கும்வேளை, இவ்வெண்ணிக்கை இந்தியாவில் சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் என்று அச்செய்தி கூறுகிறது.
15 முதல் 20 விழுக்காடு வரையிலான சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கு மதுபானப் போதைகள் காரணம் எனவும், இந்தியாவில் சாலை விபத்துக்களால் இறப்போரில் பெரும்பாலானவர்கள் நடைபாதைப் பயணிகள் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகிலுள்ள வாகனங்களில் ஒரு விழுக்காடு மட்டுமே இந்தியாவில் உள்ளது எனினும், உலகில் இடம் பெறும் சாலை விபத்துக்கள் தொடர்புடைய இறப்புக்களில் 6 விழுக்காடு இந்தியாவில் இடம் பெறுகின்றது என்றும் அந்த ஊடகச் செய்தி கூறுகிறது.
தமிழகத்தில், வாகனங்கள் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகள் உருவாகாததால், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில், கடந்த செப்டம்பர் வரை நிகழ்ந்த சாலை விபத்துகளில், 11 ஆயிரத்து 779 பேர் பலியாகியுள்ளனர். மாதம் ஒன்றிற்கு, 5,000 முதல் 6,000 வரையிலான சாலை விபத்துகள் தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துகளில், கடந்தாண்டில் தமிழகத்தில் இடம் பெற்றவை 15.1 விழுக்காடாகும்.







All the contents on this site are copyrighted ©.