2011-12-22 15:16:42

டிசம்பர் 23 வாழ்ந்தவர் வழியில்.... பியெர் செசார் ஜான்சென்


பியெர் செசார் ஜான்சென் (Pierre Jules César Janssen) என்பவர், ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் ஆங்கிலேய அறிவியலாளர் ஜோசப் நார்மன் லாக்கியர் (Joseph Norman Lockyer) என்பவருடன் இணைந்து ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தார். 1824ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி பிரான்சின் பாரிசில் பிறந்த ஜான்சென் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்றுப் பல்கலைக்கழக பேராசிரியர் ஆனார். ஆனாலும் இவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு அறிவியல் நிகழ்வுகளை ஆராயும் பணிக்காகப் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். இவ்வாறு, நிலநடுக் கோட்டின் காந்தத்தன்மையை ஆராய்வதற்காக 1857 ம் ஆண்டில் பெரு நாட்டிற்குச் சென்றார். 1867 ம் ஆண்டில் அசோரெஸ் (Azores) தீவுகளில் ஒளியியல் மற்றும் காந்தத் தன்மைகளை ஆராய்ந்தார். வெள்ளிக்கோளின் (Venus) நகர்வுகளை 1874 ம் ஆண்டில் ஜப்பானிலும், 1882 ம் ஆண்டில் அல்ஜீரியாவிலும் வெற்றிகரமாகக் கண்டறிந்தார். முழுமையான சூரிய கிரகணத்தைக் கண்டறியும் பல ஆராய்ச்சிகளில் பங்கு பெற்றார். இதற்காக, இத்தாலி (1867), குண்டூர் (Guntur -1868), அல்ஜியர்ஸ் (1870), சியாம் (1875), கரோலின் தீவுகள் (1883), Alcosebre (ஸ்பெயின் 1905) போன்ற இடங்களுக்கும் தனது குழுவினருடன் சென்றார். சூரியனிடமிருந்து வீசுகின்ற பெரிய வெண்கதிர்களைச் சூரிய கிரகணம் இன்றி எவ்வாறு கண்டறிவது என்பதை 1868ம் ஆண்டில் கண்டுபிடித்தார் ஜான்சென். இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் 1868 ம் ஆண்டு ஆகஸ்ட் 18 ம் தேதி சூரிய கிரகணத்தை ஆராய்ந்து கொண்டிருந்த போது சூரிய அலையில் 587.49 nm அலைநீளம் கொண்ட ஒரு வெளிச்சமான மஞ்சள் கோட்டைக் கண்டார். இத்தகைய ஒளிப்பட்டைக் கோடு உலகில் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும். ஜோசப் நார்மன் லாக்கியர் என்பவரும் அதே ஆண்டு அக்டோபர் 20ம் தேதியன்று இதே கோட்டை கண்டுபிடித்து, இது ஓர் அறிமுகமில்லாத தனிமம் ஒன்றினால் வெளியிடப்பட்டதெனக் கருதினார். முதற் தடவையாக இதுவே வெளி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனிமம் ஆகும். லாக்கியர் இதற்கு சூரியனின் கிரேக்கப் பெயரான ஹேலியோஸ் எனப் பெயரிட்டார். இவ்வாறு ஹீலியம் வாயுக் கண்டுபிடிக்கப்பட்டது. பியெர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் 1907 ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உயிர் துறந்தார். இவரைக் கவுரவிக்கும் விதமாக, செவ்வாய்க் கிரகம் மற்றும் சந்திரனிலுள்ள எரிமீன்கள் பெயரிடப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.