2011-12-22 15:12:15

சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா.வின் புதிய விதி


டிச.22,2011. சிறுவர், சிறுமியர் தமக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து தாமே நேரடியாக சர்வதேச அமைப்புகளிடம் புகார் செய்வதற்கு வழி செய்யும் ஏற்பாடு ஒன்றுக்கு ஐ.நா. பொது அவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறார் உரிமைகள் குறித்த ஐ.நா. சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பிரிவு ஒன்றை அங்கீகரித்ததன் மூலம் ஐ.நா. பொது அவை இந்த அதிகாரங்களை சிறாருக்கு வழங்கியுள்ளது.
இதன் அடிப்படையில் தமக்கு எதிராக மேற்கொள்ளப்படக் கூடிய மனித உரிமை மீறல்களான, சிறார்களை விற்றல், சிறார் பாலியல் வன்முறை, சிறார் ஆபாசப்படங்கள் மற்றும் சிறாரை போர் பயிற்சிகளுக்கு உட்படுத்துதல் ஆகியவை குறித்து சிறுவர், சிறுமியர் நேரடியாகவே சர்வதேச அமைப்புக்களுக்கு முறையிட முடியும்.
மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட எவரும் எந்த ஒரு சர்வதேச அமைப்பையும் அணுகும் உரிமைகள் பெற்றிருப்பதுபோல், சிறுவர், சிறுமிகளும் இனி சர்வதேச அமைப்புக்களை நேரடியாகத் தொடர்பு கொள்ள ஒவ்வொரு நாட்டின் அரசும் ஆவன செய்ய வேண்டும் என்பது இந்த தீர்மானத்தின் முக்கிய ஒரு முடிவாகும்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிறுவர் சிறுமியர் இனி ஓரளவு பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை தனக்குப் பிறந்துள்ளதென்று ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பின் உயர் இயக்குனர் நவி பிள்ளை கூறினார்.
இத்தகைய முறைப்பாடுகளை விசாரிக்கும் காலகட்டத்தில் அந்த சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் இடைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய நாட்டின் அரசாங்கத்தை ஐ.நா. கேட்கும்.
ஐ.நா.வின் இந்த புதிய தீர்மானத்தை நாடுகள் ஏற்பதற்காக 2012ம் ஆண்டு முதல் அது அவற்றின் பார்வைக்கு விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.