2011-12-22 15:10:56

உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள்


டிச.22,2011. உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது 218 கோடி மக்கள் கிறிஸ்தவர்கள் என்று ஓர் அண்மைய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
Pew Research Center என்ற ஓர் அமெரிக்க ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, மக்கள் தொகையில் கிறிஸ்தவம் முன்னணி மதமாக உள்ளதென்றும், அடுத்தபடியாக இஸ்லாம் 160 கோடி மக்களைக் கொண்டுள்ளதென்றும் தெரிய வந்துள்ளது.
218 கோடி கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள், 37 விழுக்காட்டினர் புராட்டஸ்டன்ட் என்றழைக்கப்படும் கிறிஸ்தவப் பிரிவினர், மற்றும் 12 விழுக்காட்டினர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
100 ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்களாய் இருந்தது போலவே, 2010ம் ஆண்டிலும் மூன்றில் ஒரு பகுதி கிறிஸ்தவர்களாய் உள்ளனர்.
1910ம் ஆண்டில் ஐரோப்பாவில் 66.3 விழுக்காடு கிறிஸ்தவர்கள் இருந்தனர். அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க கண்டத்தில் 27.1 விழுக்காடும், ஆசியா-பசிபிக் பகுதிகளில் 4.5 விழுக்காடும், ஆப்ரிக்காவில் 1.4 விழுக்காடும் கிறிஸ்தவர்கள் இருந்தனர்.
2010ம் ஆண்டில் பகுதிவாரியாக பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஐரோப்பாவில் 25.9 விழுக்காடு எனக் குறைந்துள்ள கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, அமெரிக்காவில் 36.8 விழுக்காடாகவும், ஆப்ரிக்காவில் 23.6 விழுக்காடாகவும், ஆசியா-பசிபிக் பகுதிகளில் 13.1 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 232 நாடுகளில் 158 நாடுகளில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையினராய் உள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.