2011-12-22 15:10:10

இந்திய மக்களுக்கு உணவு பாதுகாப்பு கிடைப்பதற்கு அரசு மேற்கொண்டிருக்கும் விவாதங்கள் ஓரு நல்ல அடையாளம் - டில்லி பேராயர்


டிச.22,2011. இந்திய பாராளுமன்றத்தில் தற்போது விவாதிக்கப்பட்டு வரும் இரு சட்டவரைவுகளைக் குறித்து இந்திய ஆயர் ஒருவர் தன் மகிழ்வையும் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார்.
ஊழலை இந்திய சமுதாயத்தின் பொது வாழ்விலிருந்து ஒழிப்பதற்கும், அனைத்து இந்திய மக்களுக்கும் உணவு பாதுகாப்பு கிடைப்பதற்கும் அவசியமான சட்டங்களை உருவாக்கும் முயற்சியில் இந்திய பாராளு மன்றம் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளது.
இந்தச் சட்டங்கள் குறித்து மத்திய அரசு விவாதங்களை மேற்கொண்டிருப்பது இந்நாடு நல்ல திசையை நோக்கிச் செல்கிறது என்பதற்கு ஓர் அடையாளம் என்று டில்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ Fides செய்தி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையிலும் பசியிலும் இருப்போருக்கு இதுவரை தலத்திருச்சபையும், அரசுசாரா அமைப்புக்களுமே பெருமளவில் பணிகள் செய்து வந்துள்ள நிலை மாறி, அரசே இந்த முயற்சிகளை இனி மேற்கொள்ளும் என்பது நம்பிக்கையைத் தருகிறதென்று பேராயர் கொன்செஸ்ஸாவோ கூறினார்.
நற்செய்தி கூறும் சமத்துவத்தை நிலைநாட்ட, செல்வம் மிகுந்தோரிடமிருந்து வரிகள் வசூலித்து, அதனை வறியோருக்கு வழங்க வகைசெய்யும் சட்டத்தை இந்தியத் திருச்சபை மனதார வரவேற்கிறது என்றும் பேராயர் தன் செய்தியில் கூறினார்.
இந்தியாவின் பெரும் பிரச்சனையான ஊழலை ஒழிக்கவும், பொதுவாழ்வில் இன்னும் வெளிப்படையான வழிமுறைகளை மேற்கொள்ளவும் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு திருச்சபையின் முழு ஆதரவு உண்டு என்றும் டில்லி பேராயர் கொன்செஸ்ஸாவோ தன் செய்தியில் சுட்டிக் காட்டியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.