2011-12-22 15:09:56

Roman Curia அதிகாரிகளுக்கு திருத்தந்தை வழங்கிய கிறிஸ்மஸ் உரை


டிச.22,2011. நம்மிடையே பெருகிவரும் விசுவாசத் தளர்ச்சிக்குப் பெரும் மாற்றாக இளையோரிடையே காணப்படும் விசுவாச வளர்ச்சி அமைந்துள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, திருப்பீடத்தின் பல முக்கிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் Roman Curia அதிகாரிகளை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு கிறிஸ்மஸ் பெருவிழா வாழ்த்துக்களை வழங்கிய வேளையில், இளையோர் மத்தியில் தான் காணும் விசுவாச வளர்ச்சியைக் குறித்து பெருமளவில் பேசினார்.
தனக்கும், திருச்சபைக்கும் அயராது உழைக்கும் Roman Curia அங்கத்தினர்களைப் பாராட்டி, தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை, 2011ம் ஆண்டில் தான் மேற்கொண்ட பல்வேறு பயணங்கள் தனக்களித்த மன நிறைவையும் எடுத்துரைத்தார்.
கத்தோலிக்க விசுவாச வாழ்வில் ஐரோப்பா தளர்ந்து வருவதையும், ஆப்ரிக்கா வளர்ந்து வருவதையும் இவ்விரு கண்டங்களில் தான் மேற்கொண்ட பயணங்கள் தனக்கு உணர்த்தியதாக திருத்தந்தை சுட்டிக் காட்டினார்.
பொதுவாகவே, உலகெங்கும் விசுவாச வெளிப்பாடு தளர்ந்து வருவதால், பல்வேறு சமுதாய, பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு நம்மால் சரியான விடைகளைக் காண முடிவதில்லை என்பதை வலியுறுத்தினார் திருத்தந்தை.
இளையோரிடையே ஐந்து வழிகளில் விசுவாச வெளிப்பாடு வளர்ந்து வருகிறதென்று கூறிய திருத்தந்தை, இவ்வைந்து வழிகளையும் விவரித்துப் பேசினார்.
பல நாட்டவராய் தாங்கள் இருந்தாலும், கத்தோலிக்க விசுவாசம் தங்களை ஒரு குடும்பமாய் இணைத்திருப்பதை இளையோர் உணர்ந்துள்ளது; எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் இளையோர் தங்கள் உழைப்பை அளிப்பது; இறைவனை ஆராதிப்பதன் மூலம் தங்கள் ஆன்மீகத்தை வளர்த்துக் கொள்வது; ஒப்புரவு அருட்சாதனத்தைத் தங்கள் விசுவாச வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதுவது; இறுதியாக, தாங்கள் பிறரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் உருவாகும் மகிழ்வில் தங்கள் ஆன்மீகத்தை உருவாக்குவது ஆகிய ஐந்து வழிகளைக் குறித்து திருத்தந்தை மகிழ்வுடன் தன் உரையில் விளக்கிக் கூறினார்.
அசிசி நகரில் உலகத்தின் பிற மதங்களுடன் கத்தோலிக்கத் திருச்சபை மேற்கொண்ட அமைதி நாள் முயற்சிகள் குறித்தும் தன் உரையின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்டுப் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.