2011-12-21 15:40:41

டிச 22, 2011. – வாழ்ந்தவர் வழியில்........, கணித மேதை சீனிவாச இராமானுசன்


உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை சீனிவாச இராமானுஜன் 1887ம் ஆண்டு டிசம்பர் 22ம்தேதி தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார்.
எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் வாழ்ந்தாலும், இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். பத்து வயதிற்குள்ளேயே இச்சிறுவனுடைய கணித வல்லமையும் நினைவாற்றலும் ஆசிரியர்களுக்கு ஒரு புதிராக இருந்தது. ஆரம்பப் பள்ளியின் கடைசித் தேர்வில் மாவட்டத்திலேயே முதலாவதாகத் தேறியதால் அவருக்கு கும்பகோணம் நகர் மேல்நிலைப் பள்ளியில் கல்விச் சலுகை கிடைத்தது.
1903 டிசம்பரில் சென்னைப் பல்கலைகழகத்தின் மெட்ரிகுலேஷன் தேர்வில் முதல் வகுப்பில் தேறி, அதன் காரணமாக கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ‘சுப்பிரமணியம் கல்வி நிதியுதவி’ பெற்றார். கணிதம் தவிர மற்ற பாடங்கள் அனைத்திலும் இவர் தோல்வி கண்டதால் கல்வி நிதியுதவியை இழந்தார். கும்பகோணம் கல்லூரியும் அத்துடன் அவரை இழந்தது. இராமானுஜமோ கணித ஆய்வுகளில் தன்னை இழந்தார். இதற்கிடையில், சென்னை துறைமுக அலுவலகத்தில் ஒரு எழுத்தர் வேலையை ஏற்றுக் கொண்டார். ஆனால் கணிதத்தில் அவருடைய ஈடுபாடும் ஆராய்ச்சியும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1911ல் இந்தியக்கணிதக் கழகத்தின் ஆய்வுப் பத்திரிகையில் இராமானுஜனின் முதல் ஆய்வுக்கட்டுரை பிரசுரிக்கப்பட்டது. கேம்பிரிட்ஜில் பேராசிரியராக இருந்த ஜி. ஹெச். ஹார்டிக்கு 1913 ஜனவரியில் இராமானுஜம் கடிதம் ஒன்றை எழுதி அதற்கு ஒரு சேர்ப்பாக அவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாக 120 தேற்றங்களையும் அனுப்பி வைத்தார். இக்கடிதத்தை வாசித்து இராமானுஜத்தின் கணித புலமையைப் புரிந்து கொண்ட பேராசிரியர் ஹார்டியும் அவர் நண்பர் பேராசிரியர் லிட்டில்வுட்டும் சேர்ந்து அன்றே தீர்மானித்து விட்டனர் ‘இந்த இராமானுஜனை கேம்பிரிட்ஜுக்கு கொண்டுவந்துவிட வேண்டும்’ என்று. ஆனாலும் இராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடு வர முடியவில்லை. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது சுற்றுச் சூழலின் பாதிப்பை மீறி, 1914 மார்ச் மாதம் இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டார் இராமானுஜன்.
இங்கிலாந்திலிருந்த நான்கு ஆண்டுகளில் இராமானுஜன் 27 ஆய்வுக்கட்டுரைகள் பிரசுரித்தார். அவைகளில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை. 1918 இல் F.R.S. (Fellow of the royal Society) என்ற கௌரவம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அதே ஆண்டு ட்ரினிடி கல்லூரியின் உயர் ஆய்வாளர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இரண்டு கௌரவங்களையுமே பெற்ற முதல் இந்தியர் அவர்தான்.
உடல் நிலை காரணமாக 1919ல் இந்தியா திரும்பிய கணித மேதை சீனிவாச இராமானுசன், 1920ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி கும்பகோணத்தில் தன் 32ம் வயதில் காலமானார்.
இவரது மரணத்துக்குப் பின் இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் தொகுத்து புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டுள்ளது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்.








All the contents on this site are copyrighted ©.