2011-12-21 15:40:01

இந்தியாவில் போபால் நச்சுவாயு விபத்துக்குக் காரணமான நிறுவனத்தின் விளம்பரங்கள் ஒலிம்பிக் அரங்கத்தில் இடம்பெறாது


டிச.21,2011. இந்தியாவில் போபால் நச்சுவாயு விபத்துக்குக் காரணமான Union Carbide நிறுவனத்தை விலைக்கு வாங்கிய Dow Chemicals என்ற நிறுவனம் 2012ம் ஆண்டு இலண்டனில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு நிதி ஆதரவு தருவதைக் கண்டித்து, இந்திய மனித உரிமை அமைப்புக்களும், இங்கிலாந்தின் சில மனித உரிமை அமைப்புக்களும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளன.
இந்த எதிர்ப்புக்களின் எதிரொலியாக, Dow Chemicals நிறுவனத்தின் விளம்பரங்கள் எதுவும் ஒலிம்பிக் அரங்கத்தில் இடம்பெறாது என்று இலண்டன் ஒலிம்பிக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆயிரம் மக்களின் உயிரைப் பலி கொண்ட எந்த நிறுவனமும் ஓர் உலகப் பொது விழாவில் இடம் பெறக்கூடாது என்றும், மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பிய இந்த எதிர்ப்பு தகுந்த பலனைத் தந்துள்ளது என்றும், PVCHR என்ற மனித உரிமைகள் அமைப்பின் இந்திய இயக்குனர் Lenin Raghuvanshi கூறினார்.
20000க்கும் அதிகமானோர் இறப்பதற்கும், 150000க்கும் அதிகமானோர் ஊனமுற்றவர்களாய் வாழ்வதற்கும் காரணமான Union Carbide நிறுவனத்தை 2001ம் ஆண்டு Dow Chemicals நிறுவனம் விலை கொடுத்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.