2011-12-20 15:38:36

டிசம்பர் 21, வாழ்ந்தவர் வழியில்... புனித பீட்டர் கனிசியஸ் (Saint Peter Canisius)


கத்தோலிக்கத் திருமறையின் அரிச்சுவடியாக விளங்கும் மறைகல்வி நூலை எழுதியவர் பீட்டர் கனிசியஸ். இவர் 1521ம் ஆண்டு மே மாதம் 8ம் தேதி நெதர்லாந்து நாட்டில் பிறந்தார்.
Cologne பல்கலைக்கழகத்தில் இவர் கல்வி கற்றபோது, இயேசு சபையை நிறுவியவர்களில் ஒருவரான அருளாளர் Peter Faberஐ அங்கு சந்தித்தார். 1543ம் ஆண்டு இவர் இயேசு சபையில் சேர்ந்தார். அப்போது இவர் வயது 22.
ஜெர்மன் நாட்டில் இயேசு சபையின் பணிகள் வேரூன்ற காரணமாய் இருந்தவர் பீட்டர் கனிசியஸ். இவரது அயராத உழைப்பும், பயணங்களும் "ஜெர்மனியின் இரண்டாவது திருத்தூதர்" என்ற பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது. (7வது, மற்றும் 8வது நூற்றாண்டில் ஜெர்மனியில் உழைத்த புனித போனிபாஸ் ஜெர்மன் நாட்டின் முதல் திருத்தூதர் என்று அழைக்கப்படுகிறார்.)
16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபைக்குச் சவாலாகத் தோன்றிய Protestant கிறிஸ்தவ சபையின் தாக்கங்கள் ஜெர்மன் நாட்டில் ஊடுருவுவதை எதிர்த்துப் போராடியவர் பீட்டர் கனிசியஸ். கல்வி புகட்டுவதிலும், மறையுரைகள் வழங்குவதிலும் தலை சிறந்தவராக விளங்கினார். வியென்னா ஆயராகும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தபோது, அதை ஏற்க மறுத்து, தன் பணிகளைத் தொடர்ந்தார். கல்விப் பணியில் இவர் காட்டிய ஆர்வத்தால், இயேசு சபையின் பல கல்வி நிறுவனங்கள் இவரது பெயரைத் தாங்கியுள்ளன.
1597ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி பீட்டர் கனிசியஸ் இறையடி சேர்ந்தார். 1925ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பத்திநாதர் இவரைப் புனிதராக உயர்த்தினார். திருச்சபையின் மறை வல்லுனர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.








All the contents on this site are copyrighted ©.