2011-12-19 15:37:36

வாரம் ஓர் அலசல் - வாழ்வுக்காக வலி சுமக்கும் மனது


டிச.19,2011. உறக்கம் வேண்டும் எனக்கு என் உயிரே என் நாடு அடைந்திட, நித்தம் அந்த நினைவில் என் கண்கள் தூங்க மறுக்கிறது. படகு தலைகீழாய்ப் புரளப் போவதறியாமல் கைவீசிக் களித்திருந்த நாட்களைத் தூரவைத்து பயணத்தைத் தொடர்ந்தது என் உயிர். எல்லாம் பறிபோய் கண்ணீரில்தான் இப்போது வாழ்க்கையே. எந்தத் தோள்களும் தயாராக இல்லை என் வலிகளைத் தாங்குவதற்கு. ஆறுதல் கூறவும் யாருக்கும் வார்த்தைகள் வருவதில்லை. சப்தமின்றி மனதுக்குள் சத்தியங்கள் செய்திட்ட போதிலும் நடந்து வந்த பாதையை ஏனோ மனது மறக்க மறுக்கிறது. மனத்தின் வலி மட்டும் கணம்தோறும் கூடுகின்றது. ஆனால் எதை இழந்த போதிலும் நம்பிக்கை ஒன்றே கை கொடுக்கும் என்று நம்பிக் காத்திருக்கின்றேன் எதிர்காலத்தை நோக்கி..... எம் இனிய வானொலி நேயர்களே, இந்த மாதிரியான வரிகளுடன் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள், சொந்த நாடுகளைவிட்டு வேற்று நாடுகள் நோக்கி ஆபத்தானப் படகுப் பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் பலரின் வாழ்வு கடல் பயணத்திலே கரைந்து விடுகின்றது.
“படகு விபத்து காரணமாக 200 பேரைக் காணவில்லை” என்று இஞ்ஞாயிறன்றுகூட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. ஆஸ்திரேலியாவுக்குச் சென்று தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இரான், இராக், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த குறைந்தது 250 பேர் இப்படகில் சென்றுள்ளனர். இவ்வெண்ணிக்கை சுமார் 400 என்றுகூடச் சில ஊடகங்கள் கூறுகின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவை அடுத்த கடல்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்றும், படகின் கொள்ளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த விபத்தில் தப்பி, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சிலரை, மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீட்டு வந்துள்ளனர். இதுவரை 33 பேர் வரை மீட்கப்பட்டிருக்கின்றனர். எஞ்சியவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. மூன்று முதல் நான்கு மீட்டர் உயரமுள்ள அலைகள் இருந்ததாகவும், வேகமாக காற்றடித்தாகவும் இந்த விபத்தில் தப்பியவர்கள் கூறுகின்றனர்.
சொந்த நாட்டில் கலவரம், பிரச்சனை, நெருக்கடி, பஞ்சம் பட்டினி. இதனால் வாழ்வில் வலி, மனதில் கலக்கம். எனவே குடும்பப் பொறுப்பைத் தோள்களில் சுமந்து சொந்தங்களையும் பந்தங்களையும் விட்டுத் தினமும் எத்தனையோ மக்கள் பயணத்தைத் தொடங்குகின்றனர். நெடிய நீண்ட பயணங்களை முடித்து, முறையான ஆவணங்களுடனோ அல்லது ஆவணங்கள் இன்றியோ எப்படியோ குடியேறி வாழ்வோரிடம் அவர்களது அனுபவங்களைக் கேட்டால், பலர் அவற்றைச் சரவெடியாக வெடித்துத் தள்ளுகிறார்கள். ஆப்ரிக்க நாடான சியெரா லியோன் (Sierra Leone) நாட்டைச் சேர்ந்த Chernor Jalloh என்பவர், ஏழு தடவைகள் தொடர்ந்து முயற்சி செய்ததன் பயனாக 1999ம் ஆண்டில் இஸ்பெயினில் தங்க அனுமதி பெற்றுள்ளார். மேற்கு ஆப்ரிக்க நாடான சியெரா லியோனில் 1991ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை உள்நாட்டுப் போர் நடந்தது. அதில் 50 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் இறந்தனர். நாட்டின் உள்கட்டமைப்பும் பெரிய அளவில் அழிக்கப்பட்டது. இருபது இலட்சத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்ந்தனர். இவ்வளவுக்கும் இந்த நாடு, உலகில் வைரம் வெட்டி எடுக்கும் பத்து முக்கிய நாடுகளில் ஒன்றாகும். டைட்டானியமும் பாக்ஸைட்டும் தங்கமும் அதிகம் கிடைக்கும் நாடாகும். இவ்வளவு இயற்கை வளம் இருந்த போதிலும் இந்நாட்டில் 70 விழுக்காட்டுக்கு அதிகமானோர் வறுமையில் வாழ்கின்றனர். இந்நிலையில் Chernor, வாழும் வழிதேடி இஸ்பெயின் சென்றுள்ளார். இவர் ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டதைத் தமிழில் தருகிறோம்
சியெரா லியோனின் வடக்கு மாநில நகரமான Makeni யில் 17 வயது வரை வாழ்ந்தேன். அங்கு ஊரடங்குச் சட்டம் இருந்த போதிலும் இரவு முழுவதும் துப்பாக்கிக் குண்டுவெடிப்புச் சப்தங்களை கேட்க முடிந்தது. பிச்சைக்காரர்கள் அல்லது லைபீரிய நாட்டு அகதிகள் போல புரட்சியாளர்கள் வந்து மகேனி நகர மக்களை வறுத்தெடுத்தனர். எனது உறவினர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொரு உறவினர் புரட்சியாளர்களால் கடத்தப்பட்டார். சிறார், புரட்சியாளர்களால் எடுத்துச் செல்லப்பட்டால் அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவர் என்பது எல்லாருக்கும் தெரியும். மேலும் பல திகிலூட்டும் செயல்களும் அங்கு நடந்தன. கண்கள் இரணமாகி, கால்கள் வெட்டப்பட்டு, இரத்தம் வடியும் காதுகளுடன் Kono நகரிலிருந்து தினமும் மக்கள் வரத் தொடங்கினர். எனவே கினி நாட்டுத் தலைநகரான Conakry யில் எனது தாயோடு சேர்ந்து வாழ்வதற்காக 1990ம் ஆண்டு ஒரு வெள்ளிக்கிழமை லாரிக்காரரிடம் அதிகப்பணம் கொடுத்து அதில் ஏறினேன். ஏனெனில் எனது தாய் அதற்கு முந்தைய ஆண்டுதான் அங்குச் சென்றிருந்தார். ஆனால், நான் புரட்சிப்படையோடு தொடர்புடையவன் என்ற சந்தேகத்தில் எல்லைப் பகுதியில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். பின்னர் 1995ம் ஆண்டில் காம்பியா நாட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து 1999ம் ஆண்டில் செனெகல் நாடு சென்றேன். அங்கிருந்து ஒரு நண்பர் மூலமாக ஐரோப்பா வந்தேன்...
இவ்வாறு தனது குடியேற்றத்தை விவரித்துள்ளார் Chernor. ஒவ்வொரு குடியேற்றதாரரின் அனுபவமும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றது. ஆயினும் குடியேறும் நாடுகளில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நாம் இத்தாலியில் வாழ்வோரை வைத்து யூகமாகச் சொல்ல முடியும். 50 வயதான ஜான்லூக்கா காசேரி (Gianluca Casseri) என்ற இத்தாலியர், கடந்த வாரத்தில் இத்தாலியின் புகழ் பெற்ற நகரமான பிளாரன்சின் இரண்டு பொதுச் சந்தைகளில் தன்னிச்சையாகத் துப்பாக்கியால் சுட்டார். அந்தச் சந்தையில் பொருட்களை விற்றுக் கொண்டிருந்த இரண்டு செனெகல் நாட்டினர் பலியாகினர். பின்னர் அந்த மனிதரும் தன்னேயே சுட்டுக் கொண்டு இறந்து விட்டார். இந்த வன்செயலைக் கண்டித்துப் பேசிய இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ, இது கண்மூடித்தனமான வெறுப்புச் செயல், இத்தகைய சகிப்பற்றதன்மையின் ஒவ்வொரு வடிவத்தையும் ஒழிக்க வேண்டுமென இத்தாலியரைக் கேட்டுக் கொண்டார். இது ஓர் இனவெறிக் கொலை என்று ஊடகங்கள் விமர்சித்தன. இத்தாலியில் குடியேறியுள்ள செனெகல் நாட்டினர் அந்த நாளில் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அன்று செனகல் நாட்டினர் ஒருவர் தொலைக்காட்சிப் பேட்டியில் சொன்னார் – இந்த நாட்டினர் நாய்கள் மீது மிகுந்த அன்பு காட்டி அவற்றை வளர்க்கின்றனர். ஆனால் எங்களை மனிதர்களாக மதிப்பதில்லை என்று. 72 வயது நிரம்பிய ஓர் எழுத்தாளர் கடந்த வாரத்தில் சொன்னார் – நான் கறுப்பாக இருந்ததால் என் தந்தை என்னைவிட்டுப் பிரிந்து விட்டார். என் தந்தையை இதுவரை நான் பார்த்ததே இல்லை, அவரை இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறேன் என்று.
பொதுவாக, நாடுகளில் வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் அதிகரிக்க அதிகரிக்க, குடியேற்றதாரர் மீதான பரிவும் குறைந்து வருகின்றது. டிசம்பர் 18, இஞ்ஞாயிறன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் அனைத்துலக குடியேற்றதாரர் தினத்தைக் கடைபிடித்தது. அந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், இன்று உலக அளவில் ஏறக்குறைய 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரர் உள்ளனர். ஒவ்வொரு நாடும், குடியேறும் நாடாகவும் வழியில் கடந்து செல்லும் நாடாகவும் அடிக்கடி மாறி வருகிறது, பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் தாய்லாந்து மலேசியா போன்ற நாடுகளுக்கு, ஏழை நாடுகளிலிருந்து பலர் வேலை தேடிச் செல்கின்றனர். குடியேற்றதாரர்கள் தங்களை ஏற்றுள்ள நாடுகளுக்கும் சொந்த நாடுகளுக்கும் மிகுந்த உதவி செய்கிறார்கள், இவர்களது மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மனித உரிமைகள் எல்லாருக்கும் பொதுவானது என்றும், எல்லா நாடுகளும் குடியேற்றதாரரை மாண்புடன் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இன்று வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் பல நாடுகள் அதிகமான குடியேற்றதாரரைப் பெறுகின்றன. இந்தக் குடியேற்றதாரர், அவர்கள் குடியேறும் நாடுகளிடமிருந்து அதிகமான ஆதரவைப் பெற வேண்டும் என்று ஐ.நா.அதிகாரி Bela Hovy கூறினார்.
RealAudioMP3 இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டும், மனித மாண்பு எப்போதும் மதிக்கப்பட வேண்டும் என்றார். மனித மற்றும் இறைவனின் நீதி பற்றிப் பேசிய திருத்தந்தை, மனிதன் காட்டும் நீதி, சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கும், தவறு செய்தவர் திருந்துவதற்கும் உதவி செய்கின்றன. ஆனால் கடவுள் காட்டும் நீதி, பரிவிரக்கத்தையும் மன்னிப்பையும் உள்ளடக்கியதாகும் என்று கூறினார்.
RealAudioMP3 ஒவ்வொருவரின் மனித உரிமைகள் காக்கப்படுவதும் ஒவ்வொருவரின் மனித மாண்பு மதிக்கப்படுவதும் ஒவ்வொருவரின் தவிர்க்க முடியாத உரிமையாகும். இவை மீறப்படும் போது, அவர்களைத் தமது சாயலாக உருவாக்கிய கடவுளையே புறக்கணிப்பதாக இருக்கும்.
அந்த மரத்தில் அணில் கூட்டம் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்தது. அந்தப் பக்கம் வந்த ஓநாய் ஒன்று, அணில்களின் ஆரவாரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. அது ஒரு குட்டி அணிலைக் கூப்பிட்டு, “அணிலே, நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் துறுதுறுவெனவும் ஓடியாடி விளையாடுகிறீர்கள். எப்போதும் அழகாக மகிழ்ச்சியாகவே இருக்கிறீர்கள், ஆனால் நாங்கள் உங்களைவிட வலிமையானவர்கள். ஆனால் எப்போது பார்த்தாலும் எதையோ பறி கொடுத்தவர்கள் போல மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம், கொடூரமாக அலைகிறோம், ஓலமிட்டே சாகிறோம்” என்று சொன்னது. அதற்கு குட்டி அணில் சொன்னது : “நாங்கள் யாருக்கும் எந்தவிதக் கெடுதியும் செய்வதில்லை, பழ வகைகளையே சாப்பிடுகிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஆனால் ஓநாய்களாகிய நீங்களோ அடுத்தவர்க்கு அனைத்து விதமான கெடுதல்களையும் செய்கிறீர்கள். அடுத்தவரின் இரத்த உடம்பையே சாப்பிடுகிறீர்கள், அப்புறம் மகிழ்ச்சி எப்படி வரும்” என்றது. அணில் குட்டி முடிவாகச் சொன்னது : “நீங்கள் செய்யும் கொடுமைகள் உங்கள் இதயத்தை அரித்துக் கொண்டே இருக்கின்றன, அதனால்தான் உங்கள் முகம் இவ்வளவு கொடூரமாக இருக்கின்றது, அதனால்தான் ஓலமிட்டேயும் சாகிறீர்கள்” என்று.
ஆம். அகம் எப்படியோ அப்படியே புறமும் இருக்கும். வேற்றுமை பாராமல் அனைவரையும் மனதார மதித்து வாழ்ந்தால் உள்ளும் புறமும் அமைதியும் ஆனந்தமும் நிலவும். இந்த அமைதியைத் தரவே இயேசு கிறிஸ்து மனித உரு எடுத்தார்.







All the contents on this site are copyrighted ©.