2011-12-19 15:49:43

நன்னெறி என்பது வர்த்தக உலகின் உள்ளார்ந்த ஒரு நாடித்துடிப்பு - திருப்பீட அதிகாரி


டிச.19,2011. நன்னெறி என்பது வர்த்தக உலகிற்கு அந்நியமாக வெளியிலிருந்து சேர்க்கப்படும் ஓர் இணைப்பு அல்ல; மாறாக, வர்த்தகத்தின் உள்ளார்ந்த ஒரு நாடித்துடிப்பு என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா.அவை மற்றும், பிற பன்னாட்டு நிறுவனங்களில் திருப்பீடத்தின் சார்பாக, நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி, அங்கு அண்மையில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் உயர்மட்டக் கூட்டத்தின் எட்டாவது அமர்வில் வர்த்தக உலகைக் குறித்த திருப்பீடத்தின் எண்ணங்களை வெளியிடுகையில் இவ்வாறு கூறினார்.
ஐரோப்பிய நாடுகளும், இன்னும் பிற முன்னணி நாடுகளும் சந்தித்து வரும் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க, இந்நாடுகள் வெளியிட்டுள்ள திட்டங்கள் இளையோரையும், பொருளாதாரத்தில் நலிந்தோரையும் பெருமளவு பாதிக்கும் ஆபத்து உள்ளதென்று பேராயர் தொமாசி தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரம் குறித்து எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் நன்னெறியின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிய பேராயர், நலிந்த மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டாத பொருளாதாரத் திட்டங்கள் நன்னெறியைச் சாராதவை என்றும் கூறினார்.
“வறியோர் மீது அக்கறை கொள்வது என்றால், அவர்களுக்கு தேவையான உணவைத் தருவது மட்டுமல்ல, அவர்களது பசிக்கும், பட்டினிக்கும் காரணம் என்ன என்பதையும் ஆராய்வது” என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறியதைத் தன் உரையில் எடுத்துக் கூறிய பேராயர் தொமாசி, பொருளாதாரச் சரிவின் காரணங்களைத் தீர்க்கமாக ஆராய்வது உலக வர்த்தக நிறுவனத்தின் ஒரு முக்கிய பணி என்பதை வலியுறுத்தினார்.
பொதுவாகவே, மனித குடும்பத்திற்காக சந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளனவே தவிர, சந்தைகளுக்காக மனித குடும்பம் உருவாக்கப்படவில்லை என்பதை வர்த்தக உலகம் புரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் தீரும், மக்களிடையே பயம் விலகி நம்பிக்கை பிறக்கும் என்று பேராயர் தொமாசி தன் உரையின் இறுதியில் குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.