2011-12-19 15:50:43

சிறை வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளும் விடுவிக்கப்பட ஹாங்காங்கிலுள்ள மனித உரிமை அமைப்புகள் அழைப்பு


டிச.19,2011. சீனாவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை நடவடிக்கையாளர்களும் கத்தோலிக்கத் திருச்சபை அதிகாரிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என ஹாங்காங்கிலுள்ள மனித உரிமை அமைப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
சீன அரசால் சிறை வைக்கப்பட்டிருக்கும் மனித உரிமை வழக்குரைஞர் Gao Zhisheng, இரு ஆயர்கள் மற்றும் 30 குருக்களின் விடுதலைக்கு அழைப்பு விடுத்துள்ள சீன மனித உரிமை அமைப்புகள், நம்பிக்கையின் காலமான கிறிஸ்மஸ் காலத்தின்போது இவர்கள் விடுவிக்கப்படுவது அர்த்தம் நிறைந்ததாக இருக்கும் என விண்ணப்பித்துள்ளன.
சீனாவில் மத விடுதலை இருப்பதாகவும், மதத்தை மதிப்பதாகவும் அரசு சொல்லி வருவது உண்மையெனில், சிறைவைக்கப்பட்டிருக்கும் தலத்திருச்சபைத் தலைவர்களை விடுவிக்க வேண்டியது அரசின் கடமையாகிறது என்றார் தலத்திருச்சபையின் நீதி மற்றும் அமைதி அவையின் செயலர் Lina Chan Li-na.
சீனத் திருச்சபை அதிகாரிகள் தங்கள் சமயக் கடமைகளை ஆற்ற தடை செய்யப்பட்டிருப்பதாகவும், கல்வி பயில அனுமதி மறுக்கப்படுவதாகவும் அரசை மேலும் குறை கூறியுள்ளது தலத்திருச்சபை தரப்பு.








All the contents on this site are copyrighted ©.