2011-12-17 15:18:25

டிசம்பர் 18, அனைத்துலக குடியேற்றதாரர் தினம்


டிச.17,2011. சரியான கொள்கைகள் மற்றும் பாதுகாப்புகளுடன் மக்களின் குடியேற்றத்திற்கு ஆதரவளிக்கப்பட்டால் அதனால் நாடுகள் நன்மைகள் பெறும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று (டிசம்பர் 18) கடைப்பிடிக்கப்படும் அனைத்துலக குடியேற்றதாரர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், குடியேற்றதாரர் ஒரு சுமையாக நோக்கப்படுவது உட்பட அவர்கள் குறித்த பல தவறான எண்ணங்கள் பரவலாகக் காணப்படுவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
குடியேற்றதாரர் தங்களது திறமைகளால் தங்களை அனுமதித்துள்ள நாடுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும்வேளை, சட்டத்துக்குப் புறம்பே குடியேறியிருப்பவர்கள் சமுதாயத்துக்கு அச்சுறுத்தலாக நோக்கப்படுகின்றார்கள் என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தின்படி, ஒவ்வொருவரும் அடிப்படை மனித உரிமைகளை அனுபவிக்கும் தகுதியைக் கொண்டுள்ளதால், இந்தக் குடியேற்றதாரர், திருப்பி அனுப்பப்படக் கூடாது என்றும் கூறியுள்ளார் பான் கி மூன்.
மனித உரிமைகள் பிறரன்பு சார்ந்த விவகாரம் அல்ல, மாறாக இவை ஒவ்வொருவரின் தவிர்க்க முடியாத உரிமைகள் என்றுரைக்கும் அவரின் செய்தி, நாடுகள் அனைத்தும்குடியேற்றதாரர் குறித்த அனைத்துலக சட்டத்தை மதித்து நடக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
இன்று உலகில் சுமார் 21 கோடியே 40 இலட்சம் குடியேற்றதாரர் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.