2011-12-17 15:14:06

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 உலகின் பல கோடி மக்களை ஒரே நேரத்தில் மனிதாபிமானம் நிறைந்த ஒரு முயற்சியில் இணைத்த அந்த நாள்... 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி. ஆப்ரிக்காவின் வறுமைப்பட்ட நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் நிகழ்ந்துவந்த பட்டினிச்சாவுகள் மனித சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருந்த நேரம் அது. Bob Geldof மற்றும் Midge Ure என்ற இரு பெரும் இசைக்கலைஞர்கள் தங்கள் மனசாட்சியின் குரலுக்குச் செவிமடுத்தனர். எத்தியோப்பிய மக்களின் பட்டினியைப் போக்க நிதி திரட்டும் எண்ணத்துடன் Live Aid என்ற இசை விழாவை இவ்விருவரும் ஏற்பாடு செய்தனர்.
மைக்கில் ஜாக்சன் உட்பட, உலகப் புகழ்பெற்ற பல இசைக்கலைஞர்கள் கலந்துகொண்ட அந்த இசை விழா 1985ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி நடைபெற்றது. இலண்டன் மாநகரின் Wembley விளையாட்டுத் திடலிலும், அமெரிக்காவில் Philadelphia மாநகர் கென்னடி விளையாட்டுத் திடலிலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சி செயற்கைக்கோள் வசதிகளுடன் உலகெங்கும் நேரடி ஒளிபரப்பு செய்யட்டது. அதுவரை விளையாட்டுப் போட்டிகளும் திரைப்பட விழாக்களும் மட்டுமே உலகின் பல நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்ததற்கு ஒரு மாற்றாக, மனிதாபிமானம் மிக்க ஒரு முயற்சி உலகெங்கும் நேரடி ஒளிபரப்பானது இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. 150 நாடுகளில் 190 கோடி பேருக்கும் மேற்பட்டோர் இந்த இசை நிகழ்ச்சியைக் கண்டனர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இசை நிகழ்ச்சியால் திரட்டப்பட்ட 15 கோடி பவுண்டுகள், அதாவது, 1050 கோடி ரூபாய் நிதியுதவி எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மாபெரும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலகப் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவர் Paul McCartney. 1960களில் பாப்பிசைக்கு ஒரு புது இலக்கணத்தை வடித்து, இசை உலகின் முடி சூடா மன்னர்களாக விளங்கிய Beatles என்ற இசைக்குழுவின் நால்வரில் இவரும் ஒருவர். Live Aid என்ற இசை நிகழ்ச்சியில் இவர் பாடிய “Let It Be” என்ற பாடல் நமது ஞாயிறு சிந்தனையுடன் நெருங்கியத் தொடர்புடையது.
Paul McCartney பாடிய “Let It Be” என்ற பாடலின் பொருள் "அப்படியே ஆகட்டும்" அல்லது "அப்படியே இருக்கட்டும்". இப்பாடலின் முதல் வரிகள் இதோ:
"நான் பிரச்சனைகளைச் சந்திக்கும் வேளையில், அன்னை மரியா என்னிடம் வருகிறார்.
'அப்படியே இருக்கட்டும்' என்ற அறிவு செறிந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.
என் வாழ்வை இருள் சூழும் நேரங்களில் அவர் எனக்கு முன் நிற்கிறார்.
'அப்படியே இருக்கட்டும்' என்ற அறிவுசெறிந்த வார்த்தைகளை மென்மையாக என்னிடம் சொல்கிறார்."“When I find myself in times of trouble, Mother Mary comes to me
Speaking words of wisdom, let it be
And in my hour of darkness she is standing right in front of me
Speaking words of wisdom, let it be
Let it be, let it be, let it be, let it be
Whisper words of wisdom, let it be”என்று இந்தப் பாடல் ஆரம்பமாகிறது. “Let It Be” என்ற பாடலை தான் எழுதுவதற்குக் காரணம் தன் தாயே என்று Paul McCartney தன் பேட்டிகளில் கூறியுள்ளார். பாடலாசிரியர் Paul McCartneyன் தாயின் பெயர் மேரி. ஆனால், பாடலின் வரிகளில் அவர் Mother Mary என்று எழுதியிருப்பது பலர் மனதில் அன்னை மரியாவை நினைவுறுத்துகிறது. அதேபோல் “Let It Be” என்று அடிக்கடி இந்தப் பாடலில் இடம்பெறும் சொற்கள், இளம்பெண் மரியா அன்று விண்ணகத்தூதர் கபிரியேலிடம் சொன்ன அந்தப் புகழ்பெற்ற வார்த்தைகளை நினைவுறுத்துகிறது.

உலக மீட்பர் பிறக்கப்போகிறார் என்று வானதூதர் கபிரியேல் அன்று சொன்ன செய்தியும், அதற்கு இளம்பெண் மரியா சரி என்று சொன்ன பதிலும் இன்று நாம் வாசிக்கும் நற்செய்தியாக ஒலிக்கிறது. எந்த ஒரு வரலாற்று நிகழ்வும் புத்தகத்தில் பக்கங்களாக பதியும்போது அந்த நிகழ்வின் பெருமை நம் கண் முன்னே அதிகம் தோன்றும். அங்கு உண்டான காயங்கள் பெருமளவு மறக்கப்படும். அதேபோல், விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளை நாம் திருப்பலியில் வாசகங்களாக வாசிக்கும்போது, மேன்மை, புனிதம் இவைகள் மேலோங்குவதால் அந்நிகழ்வுகளின் வேதனைகள் காயங்கள் ஆகியவற்றை நாம் மறந்துவிட வாய்ப்புண்டு. அதனால்தான் இன்று நாம் இப்பகுதியை வாசித்ததும், துணிவோடு "இது இறைவன் வழங்கும் நற்செய்தி" என்று சொல்லிவிட்டோம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், வானதூதர் கபிரியேலுக்கும் இளம்பெண் மரியாவுக்கும் இடையே இந்த நிகழ்ச்சி நடைபெற்ற வேளையில் இது கட்டாயம் நற்செய்தியாக இருந்திருக்க முடியாது என்பதை உணர்வோம்.
கிறிஸ்மஸ் நெருங்கி வரும் இந்த நாட்களில் பல பள்ளிகளில், பங்குத் தளங்களில் கிறிஸ்மஸ் நாடகங்கள் அரங்கேறும். நடிப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகள் என்பதால், நாம் இரசிப்போம், சிரிப்போம். இந்த நாடகங்களில் மரியாவுக்கு வானதூதர் தோன்றுவது, மரியா எலிசபெத்தைச் சந்திப்பது, பின்னர், மாட்டுத் தொழுவம், இடையர், மூவேந்தர் என்று... அரை மணி நேரத்தில் அழகழகான காட்சிகள் தோன்றி மறையும். இவைகளைப் பார்க்கும்போது மனம் மகிழும்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு நாடகம் முடிந்து திரும்பி வரும் வழியில், ஒரு நண்பர் திடீரென, "முதல் கிறிஸ்மஸ் இவ்வளவு அழகாக இருந்திருக்குமா?" என்றார். அந்தக் கேள்வி என்னைச் சிந்திக்க வைத்தது.
வரலாற்றில் நடந்த முதல் கிறிஸ்மஸ் எப்படி இருந்திருக்கும்? இவ்வளவு அழகாக, சுத்தமாக, மகிழ்வாக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்தச் சூழல் அப்படி. அந்தக் கொடுமையானச் சூழலைப் பற்றி பல கோணங்களில் பேசலாம். நமது இன்றைய சிந்தனைக்கு அந்தச் சூழலிலிருந்து ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி சிந்திப்போம்.

யூதேயா முழுவதும் உரோமைய ஆதிக்கம், அராஜகம் நடந்து வந்தது. இந்த அடக்கு முறையை உறுதி செய்வதற்கு, உரோமைய அரசு, படை வீரர்களை அதிகம் பயன்படுத்தியது. அடுத்த நாட்டை அடக்கியாளச் செல்லும் படைவீரர்களால் அதிகம் பாதிக்கப்படுவது அந்த நாட்டில் இருக்கும் பெண்கள். பகலோ, இரவோ எந்த நேரத்திலும் இந்தப் பெண்களுக்குப் படைவீரர்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏராளம். ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் அமெரிக்க, ஐரோப்பிய படைகளால் அந்த நாட்டுப் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களைக் கேட்டு வருகிறோம். ஒன்பது ஆண்டுகள் ஆக்ரமிப்பிற்குப் பின், அமெரிக்கப் படைகள் கடந்த புதனன்று ஈராக்கை விட்டு வெளியேறினர் என்று செய்திகளில் வாசித்தோம். இந்தச் செய்தியைக் கேட்டு, அந்த நாட்டுப் பெண்கள் கட்டாயம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்த இளவயது கிராமத்துப் பெண் மரியா.
தன் சொந்த நாட்டிலேயே இரவும் பகலும் சிறையிலடைக்கப் பட்டதைப் போல் உணர்ந்த மரியா, "இந்த அவல நிலையிலிருந்து தப்பிக்க ஒரு வழியைக் காட்ட மாட்டாயா இறைவா?" என்று தினமும் எழுப்பி வந்த வேண்டுதலுக்கு இறைவன் விடை அளித்தார். மணமாகாத மரியாவை இறைவனின் தாயாகும்படி அழைத்தார்.
இது அழைப்பு அல்ல. தீர்ப்பு. மரணதண்டனைக்கான தீர்ப்பு. மணமாகாத இளம் பெண்கள் தாயானால் அவர்களை ஊருக்கு நடுவே இழுத்துவந்து, கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது யூதர்களின் சட்டம். இதை நன்கு அறிந்திருந்தார் மரியா. தன் தோழிகளில் ஒரு சிலர் உரோமையப் படை வீரர்களின் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகி, கருவுற்று, ஊருக்கு நடுவே கல்லால் எறியப்பட்டு இறந்ததை மரியா பார்த்திருப்பார். இதோ, இதையொத்த ஒரு நிலைக்கு தான் தள்ளப்படுவதை மரியா உணர்ந்தார். மணமாகாத தன்னைத் தாய்மை நிலைக்கு கடவுள் அழைத்தது பெரும் இடியாக மரியாவின் செவிகளில் ஒலித்திருக்கும்.
இறைவன் தந்த அந்த அழைப்பிற்கு சரி என்று சொல்வதும், மரணதண்டனையைத் தனக்குத் தானே வழங்கிக் கொள்வதும், விருப்பப்பட்டு தூக்குக் கயிறை எடுத்து, கழுத்தில் மாட்டிக் கொள்வதும்.. எல்லாம் ஒன்று தான். இருந்தாலும், அந்த இறைவன் மேல் அத்தனை அதீத நம்பிக்கை அந்த இளம் பெண்ணுக்கு. 'இதோ உமது அடிமை' என்று சொன்னார் மரியா. தன் வழியாக தனது சமுதாயத்திற்கும், இந்த உலகிற்கும் மீட்பு வரும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மரியா, அந்த வாய்ப்புடன் வந்த பேராபத்தைப் பெரிதாக எண்ணாமல், இறைவன் மீது நம்பிக்கை கொண்டு 'ஆகட்டும்' என்று பதில் சொன்னார். பெரும் போராட்டத்திற்குப் பின் வந்த பதில் அது.
இன்று நாம் வாசித்த நற்செய்தியின் இறுதியில், நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும் என்று மரியா சொல்லும் அந்த வார்த்தைகளே இந்த முழுப் பகுதியையும் நற்செய்தியாக மாற்றியுள்ளது. இந்த நம்பிக்கை வரிகள் இல்லையெனில், இன்றைய விவிலிய வாசகத்தை நற்செய்தி என்று சொல்வது மிகக்கடினம். மரியா சொன்ன 'அப்படியே ஆகட்டும்' என்ற இந்த அற்புத வார்த்தைகள் இத்தனை நூற்றாண்டுகளாக பலருக்கு, பல வழிகளில் நற்செய்தியாக ஒலித்துள்ளன.

1985ம் ஆண்டு Paul McCartney பாடிய “Let It Be” பாடல் வழியாக மீண்டும் மரியா சொன்ன அந்த அற்புத வார்த்தைகள் பலருக்கு நற்செய்தியாக ஒலித்திருக்க வேண்டும். பசிக்கொடுமைகள், போர் கொடுமைகள் பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், சாதி, மதம், இனம் என்று பல்வேறு பாகுபாடுகளால் உருவாகும் கொடுமைகள்... என்று கொடுமைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும் இந்த உலகில், இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் விடிவு இல்லையா என்று மனம் கேள்விகளை எழுப்பும். Live Aid இசை நிகழ்ச்சியைக் கண்ட பலகோடி உள்ளங்களில் எத்தியோப்பியாவின் பட்டினிச்சாவுகள் பல கேள்விகளை எழுப்பியிருக்க வேண்டும். அந்தக் கேள்விகளுக்கு ஏதோ ஒரு வகையில் விடைதரும் வண்ணம் Paul McCartney பாடிய “Let It Be” என்ற இந்தப் பாடல் அமைந்ததென்று சொல்லலாம். நம்பிக்கையற்ற ஒரு சூழலை நற்செய்தியாக மாற்றிய 'அப்படியே ஆகட்டும்' என்ற மரியாவின் வார்த்தைகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்தப்பாடல், பலரது உள்ளங்களில் நம்பிக்கையை விதைத்திருக்கும்.

ஆப்ரிக்க நாடுகளில் இன்றும் பட்டினிச் சாவுகள் தொடர்கின்றன. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. அநீதிகளாலும், கொடுமைகளாலும் நொறுக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் அனைவருமே துன்பங்களால், துயரங்களால் துவண்டு போகாமல், அவர்களில் ஒருவர் எடுக்கும் துணிவான ஒரு முடிவு அந்த சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றியுள்ளது என்பதற்கு மரியாவின் 'ஆகட்டும்' என்ற முடிவு ஓர் எடுத்துக்காட்டு. மரியாவுக்கு இந்தத் துணிவை அளித்தது அவரது சொந்த சக்தி அல்ல, மாறாக, இறைவன் மட்டில் அவர் கொண்டிருந்த ஆணித்தரமான, அசைக்க முடியாத நம்பிக்கை.
இதேபோல், தனிப்பட்ட வாழ்வில் பல இன்னல்களை சந்தித்து, அதனால் மனம் வெறுத்து கொடுமையான பழக்கங்களுக்கு அடிமையாகி இருக்கும் ஒருவர் ஆண்டவன் தரும் ஆயிரம் அழைப்புக்களில் ஒரே ஓர் அழைப்பை உணர்ந்து, அருள் நிறைந்த ஒரே ஒரு தருணத்தைப் பயன்படுத்தி, 'ஆகட்டும்' என்று ஆண்டவனிடம் சரண் அடையும்போது, அங்கும் புதிய சக்தியும், விடுதலையும் பிறக்கும்.
தனிப்பட்ட வாழ்வானாலும் சரி, சமுதாய வாழ்வானாலும் சரி நமக்குத் தேவை முடிவெடுக்கும் துணிவு. இறைவனிடம் சரணடையும் பணிவு. இவ்விரண்டும் மரியாவின் மங்கள வார்த்தை நிகழ்வில் நாம் காணும் அற்புதங்கள். மரியாவின் துணிவையும், பணிவையும் நாமும் பெற அந்த அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம்.








All the contents on this site are copyrighted ©.