2011-12-16 15:28:41

பல்கலைக்கழக மாணவர்களிடம் திருத்தந்தை : வரலாற்றைக் கட்டி எழுப்புவதில் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மோடு இருக்கிறார்


டிச.16,2011. இவ்வியாழன் மாலை, உரோம் பல்கலைக்கழகத்தின் ஏறக்குறைய பத்தாயிரம் மாணவர்களுடன் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில் மாலை திருப்புகழ்மாலையைச் செபித்த திருத்தந்தை, கிறிஸ்மஸ் தங்களது வாழ்வுக்குக் கொடுக்கும் அர்த்தம் குறித்துச் சிந்திக்குமாறு அம்மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கடவுளின்றி அல்லது கடவுளுக்கு எதிராக உலகைக் கட்டி எழுப்புவதற்கு மனிதர்கள் எத்தனை தடவைகள் முயற்சித்துள்ளனர், ஆனால் அந்த முயற்சிகள், மனித மாண்புக்கு எதிரான துன்பங்களிலே முடிந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
கிறிஸ்மஸ், உண்மையிலேயே தங்களது வாழ்வுக்கும் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கும் முக்கியமானதா? என்ற கேள்வியை மாணவர்களிடம் முன்வைத்த திருத்தந்தை, இக்காலத்தில் பலர், குறிப்பாக, பல்கலைக்கழக அறைகளில் பலர், நாம் மற்றொரு மெசியாவை, மற்றொரு கடவுளை, யாரையாவது, எதையாவது எதிர்பார்க்க வேண்டுமா? என்று ஒருவருக்கொருவர் கேட்டு வருகின்றனர் என்று கூறினார்.
இவ்வாறு கேள்வி கேட்பவர்களுக்கு, இயேசுவே, கடவுள் காட்டும் பொறுமையின் அடையாளமாய் இருக்கிறார் என்ற பதிலைப் பரிந்துரைத்தத் திருத்தந்தை, நமக்குப் பொதுப்படையான கடவுள் தேவையில்லை, மாறாக, மனிதனின் எதிர்காலத்தைத் திறந்து வைக்கும் வாழுகின்ற, உண்மையான கடவுள் தேவை என்றும் கூறினார்.
இயேசு கிறிஸ்துவின் கடவுள் நம் மத்தியில் பிரசன்னமாய் இருக்கிறார், நம்மோடு வாழ்கிறார் என்ற உறுதிப்பாட்டில் நமது எதிர்காலத்தையும் மனித சமுதாயத்தின் வரலாற்றையும் திட்டமிட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை.







All the contents on this site are copyrighted ©.