2011-12-15 13:33:13

டிசம்பர் 16 வாழ்ந்தவர் வழியில்.... சர் ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க்


சர் ஆர்தர் சார்ல்ஸ் கிளார்க் (Sir Arthur Charles Clarke) பிரித்தானிய அறிவியல்புதின எழுத்தாளரும் கண்டுபிடிப்பாளரும் மனித சமுதாயத்தின் எதிர்காலத்தை அறிவியல்ரீதியாகச் சொல்ல முயற்சி செய்தவரும் ஆவார். ஏறத்தாழ நூறு நூல்களுக்கு ஆசிரியரான ஆர்தர் சி. கிளார்க், அறிவியல் பூர்வமான ஆதாரத்தையும் கோட்பாட்டையுமே தனது எழுத்துத்துறைக்கு அதிகமாகப் பயன்படுத்தினார். 2001: ஸ்பேஸ் ஒடிசி (2001: A Space Odyssey) என்ற புதினமும் 1968ம் ஆண்டில் அதே பெயரில் ஸ்டான்லி கூப்ரிக் என்பவரால் இயக்கி இவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படமும் இவரது இந்த தொலைநோக்குக்குச் சான்றுகளாக உள்ளன. ஆர்தர் சி. கிளார்க், ராபர்ட் ஏ. ஹெய்ன்லீன் (Robert A. Heinlein), ஐசாக் அசிமோவ் (Isaac Asimov) ஆகிய மூவரும், பல ஆண்டுகளுக்கு அறிவியல் புதினத்தின் "பெரிய மூவர்" என்ற பெயரில் அறியப்பட்டனர். 1917ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இங்கிலாந்தின் சொமர்செட் (Somerset) என்ற ஊரில் பிறந்த இவர், சிறு வயதிலேயே வானியலில் ஈடுபாடு கொண்டு அமெரிக்கப் பழைய அறிவியல்புதின நூல்களை வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 13வது வயதில் தந்தையை இழந்தார். 1941ம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய வான்படையில் இணைந்தார். அங்கு இலத்திரனியலில் பயிற்சி பெற்று வானொலிப் பள்ளியில் செய்முறைப் பயிற்சியாளரானார். இறுதியில் தென்மேற்கு இங்கிலாந்தில் வட காரன்வாலில் உள்ள டேலிட்ஸ்டோமூர் என்ற இடத்தில் அமெரிக்காவின் தரைக்கட்டுப்பாட்டு ராடார் அமைப்புக் குழுவில் பணியாற்றினர். இவர் பணியாற்றிய இந்த அமெரிக்கக் குழுவின் தலைவர் இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற லூயிஸ் டபிள்யூ ஆல்வாரெஸ் ஆவார். இந்தக் காலகட்டமே கிளார்க்கைச் சாதாரண நாவல்கள் எழுதுவதில் இருந்து அறிவியல் பக்கம் திருப்பியதாக 1963ம் ஆண்டில் தான் எழுதிய "பறத்தல் வழி" (Glide path) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் பிரித்தானிய வான்படையில் இருந்து விலகி இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் இயற்பியல் மற்றும் கணிதவியலில் சேர்ந்தார். அதன்பின்னர் பட்ட மேற்படிப்பாக வானவியலில் சேர்ந்தார். இந்தப் படிப்பு அவருக்குச் சோர்வைத் தந்ததால் அதை விடுத்து "சயின்ஸ் அப்ஸ்ட்ராக்ட்" (Science Abstracts 1949-50) என்ற இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இப்பணி அவருக்குச் சிந்திக்கவும் எழுதவும் நேரத்தைக் கொடுத்தது. 1951ம் ஆண்டிலிருந்து கிளார்க் முழுநேர எழுத்தாளரானார். 1945ம் ஆண்டில் "உலகாய மற்றும் கோள்களுக்கிடையேயான தகவல் தொடர்பிற்கு புவிநிலை செயற்கைக் கோள் பாதைகள்" (Geostationary Satellite Orbit) குறித்தான தொழில்நுட்பக் குறிப்புகள் கொண்ட தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். 1937 ம் ஆண்டு முதல் 1945 ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சில புதினங்களை கிளார்க் எழுதியிருந்தாலும் 1946 ம் ஆண்டில் அவர் எழுதிய Astounding Science Fiction முதன் முதலில் விற்பனைக்கு வந்தது. 1949 ம் ஆண்டில் இவர் எழுதி வெளியிட்ட "கோள்களுக்கிடையே பறத்தல்" (Inter Planetary Flight) என்ற நூல் பாமர மக்களும் படித்தறியும் விதமாக இருந்தது. இதில் புவியீர்ப்புப் புல அளவு, உந்தத் தேவையான கணக்கீடு, கோள்களைச் சென்றடையத் தேவையான பாதை (Trajectory) போன்ற தொழிநுட்பக் கூறுகளைத் தனியே இணைப்பாக அளித்திருந்தார். இவரது இந்தக் கற்பனை வளம் விண்வெளியில் புதிய தேடலுக்கு வித்திட்டது எனலாம். 1952 ம் ஆண்டில் இவர் எழுதிய "விண்வெளியைக் கண்டறிதல்" (Exploration of Space) என்ற நூல் இவரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதனால் இவரது புகழ் உலகெங்கும் பரவியது. "புவியில் இருந்து பார்க்கும் பொழுது வானில் ஒரே இடத்தில் இருக்குமாறு செய்மதிகளை அமைத்து, உலகளாவிய பரப்பில் தொலைத்தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்" என்ற புகழ்பெற்ற அறிவியல் கருத்தை இவர் 1945 ம் ஆண்டில் முன்வைத்தார். அவரது ஆக்கங்கள் ஏனைய மனிதர்களின் கற்பனைப் பார்வையில் இருந்து மாறுபட்டவை. தொலைநோக்குடன் வருவதுரைப்பவை. உலகைச் சுற்றி ஏவுகணைகள் பறப்பதற்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கும் முன்னரே தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் பற்றி 1945ம் ஆண்டில் விவரமாக எழுதினார். விண்வெளித் திட்டங்களின் முதல் ஆதரவாளர்கள் சிலர், ஆர்தர் கிளார்க்கின் இந்த புதிய தொழில் நுணுக்கத்தைத் தூண்டி தொடங்கினால் அதுவே அதன் செலவுகளுக்கு ஈடு செய்யும் என்றனர். கிளார்க்கோ தன் குறிக்கோளை இன்னும் மேலே உயர்த்தி வைத்தார். "நட்சத்திரப் போர்" (Star War) என்ற இராணுவப் பாதுகாப்புத் திட்டத்தை ஆர்தர் முழுவதுமாக எதிர்த்தார். இதனால் விண்வெளி போர்க்களமாகும் என எச்சரித்தார். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்குச் செலவிடப்படும் பணம் எல்லோருக்கும் பயன்படும் விதமாக, செவ்வாய்க் கோளுக்கு பன்னாட்டு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளப் பயன்படுத்தலாம் என மொழிந்தார். 1492ம் ஆண்டு கொலம்பஸ் கடற்பயணம் மேற்கொண்டு அமெரிக்காவைக் கண்டு பிடித்ததன் 500ம் ஆண்டைக் குறிக்கும் விதமாக 1942 ம் ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்தார்.
ஆர்தர் சி கிளார்க் தான் எழுதிய பல புத்தகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றுடன் அவருடைய மூன்று விதிகளையும் (Three Laws) நமக்கு விட்டுச் சென்றுள்ளார்.
1.ஒரு சிறந்த அறிவியலளர், ஏதாவது ஒன்று செயல்படுத்தக்கூடிய அல்லது முடியக்கூடிய ஒன்று எனக் கூறினால் அவர் சரியானவர்; அப்படி இல்லாமல், எதுவும் செய்யல்படுத்த முடியாது என்றால், அவர் கூற்று சரியில்லை.
2.முடியக் கூடிய ஒன்றின் எல்லையைக் கண்டறிய வேண்டுமென்றால் முடியாதது என்ற நோக்கினுள் ஓரளவாவது கடந்து பார்க்க வேண்டும்.
3.எந்த அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தையும் கற்பனையிலிருந்து வேறுபடுத்த முடியாது.
ஆர்தர் சி. கிளார்க், 1962ம் ஆண்டில் போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், தனது பிற்கால வாழ்வை நகரும் நாற்காலியிலேயே செலவழித்தார். தன் கற்பனைக்கும், சிந்தனைக்கும், எழுதுவதற்கும் ஏற்ற அமைதியான இடமாக இலங்கையின் கொழும்பு நகரைத் தேர்ந்தெடுத்து 1956ம் ஆண்டில் இலங்கையில் குடியேறி அங்கிருந்து தனது எழுத்துக்களையும் ஆய்வுகளையும் தொடர்ந்தார். 1998ம் ஆண்டில் இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் அரசியால் "knight" என்ற பட்டம் பெற்றார். 2000 மாம் ஆண்டில் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருகை தந்த போது இவருக்கு “சர்” என்ற பட்டம் அளித்துச் சிறப்பித்தார். 2005ம் ஆண்டில் இலங்கை அரசின் மிக உயரிய விருதான "ஸ்ரீ லங்காபிமன்யா" (Sri Lankabhimanya) என்ற விருதைப் பெற்றார் ஆர்தர் சி. கிளார்க். இவர், 2008ம் ஆண்டு மார்ச் 19 ம் தேதி, கொழும்பில் தனது 90ம் வயதில் காலமானார். 2007ம் ஆண்டு டிசம்பர் 16ம் நாள் தனது கடைசி பிறந்தநாளைக் கொண்டாடிய ஆர்தர் சி. கிளார்க், தனது மூன்று விருப்பங்களை வெளியிட்டார். அதில் ஒன்று இலங்கையில் நீடித்து நிலைக்கும் அமைதி திரும்ப வேண்டும் என்பதாகும்.







All the contents on this site are copyrighted ©.