2011-12-15 15:27:14

ஐ.நா அவைக்கு 2011ம் ஆண்டு முக்கியமான ஆண்டு - பொதுச் செயலர் பான் கி மூன்


டிச.15,2011. 2011ம் ஆண்டு ஐ.நா.அவைக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்து விட்டது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
2011ம் ஆண்டின் இறுதி நாட்கள் நெருங்கிவரும் வேளையில், இவ்வாண்டைக் குறித்து ஓர் அலசலை இப்புதனன்று ஐ.நா. தலைமையகத்தில் மேற்கொண்ட ஐ.நா. பொதுச் செயலர், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
அரேபிய வசந்தம் என்ற பெயரில் அந்நாடுகளில் இடம்பெற்ற புரட்சிகள், ஐ.நா.வின் புதியக் குழந்தையாக பிறந்துள்ள தெற்கு சூடான் உருவான நிகழ்வுகள், மியான்மார் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மாற்றங்கள் ஆகியவற்றில் ஐ.நா.வின் ஈடுபாட்டைத் தன் அலசலில் எடுத்தரைத்த பான் கி மூன், மனித சமுதாயம் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது என்று கூறினார்.
இம்மாதம் 31ம் தேதி தன் பொதுச் செயலர் பணியின் முதல் ஐந்தாண்டு பருவத்தை முடிக்கும் பான் கி மூன், அடுத்த ஐந்தாண்டு பருவத்தில் தான் மேற்கொள்ள விருக்கும் பணிகளின் திட்டத்தைக் குறித்தும் இக்கூட்டத்தில் பேசினார்.
அண்மையில் தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் உச்சி மாநாட்டில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டது குறித்து தன் திருப்தியை வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர், இன்னும் தொடர்ந்து உலக சமுதாயம் சந்திக்க வேண்டிய பல்வேறு சவால்களையும், சிறப்பாக ஆப்ரிக்க நாட்டில் நிலவும் பட்டினி குறித்த சவால்களையும் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.