2011-12-15 15:23:57

அருள் சகோதரி மேரி எலிஷா குற்றமற்றவர் - இலங்கை நீதி மன்றம் தீர்ப்பு


டிச.15,2011. என்னைச் சிறைக்கு அனுப்பியவர்கள் அனைவரையும் நான் மனதார மன்னிக்கிறேன் என்று அருள்சகோதரி மேரி எலிஷா கூறினார்.
அருளாளர் அன்னை தெரேசா பிறரன்புச் சபை சகோதரி மேரி எலிஷா குழந்தைகளை விற்கிறார் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அருள் சகோதரி எலிஷா குற்றமற்றவர் என்று கூறி, இலங்கை நீதி மன்றம் இவ்வியாழன் அவரை விடுவித்ததுடன், அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள கடவுச் சீட்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவரிடம் மீண்டும் சேர்க்குமாறு ஆணை பிறப்பித்தது.
நீதி மன்றத்தை விட்டு வெளியேறிய அருள்சகோதரி எலிஷா, சூழ்ந்திருந்த செய்தியாளர்களிடம் கூறிய செய்தி மன்னிப்புச் செய்தியாக இருந்தது.
கடந்த மாதம் 23ம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி, அருள்சகோதரிகள் நடத்தி வந்த ஓர் அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் நுழைந்த அரசு அதிகாரிகள் தகுந்த ஆதாரங்கள் ஏதுமின்றி, அவ்வில்லத்தின் தலைவியாகப் பணிபுரிந்த அருள்சகோதரி மேரி எலிஷாவை கைது செய்தனர்.
தேசிய குழந்தைகள் பாதுகாப்புத் துறை என்ற அரசு அமைப்பு மேற்கொண்ட இந்நடவடிக்கைகள் அவ்வமைப்பின் நம்பகத் தன்மையைப் பெரிதும் பாதித்துள்ளது என்று கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் சார்பில் இந்த வழக்கில் ஈடுபட்ட அருள்தந்தை நோயல் டயஸ் கூறினார்.
குழந்தைகள் முன்னேற்ற அரசுத் துறை அமைச்சர் இந்த நிகழ்வு குறித்து ஏற்கனவே தன் வருத்தங்களை அருள் சகோதரியிடமும் அவரது சபையிடமும் தெரிவித்துள்ளார் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.