2011-12-14 15:25:25

வன்முறையை முற்றிலும் களைவது ஒன்றே நாட்டை மீண்டும் போருக்கு இட்டுச் செல்லாத வழி - புருண்டி ஆயர்களின் கிறிஸ்மஸ் செய்தி


டிச.14,2011. உள்நாட்டுப் போரின் காயங்கள் இன்னும் முழுமையாக ஆறாமல் இருக்கும் இந்த வேளையில், வன்முறையை இந்த நாட்டிலிருந்து முற்றிலும் களைவது ஒன்றே இந்த நாட்டை மீண்டும் போருக்கு இட்டுச் செல்லாத வழியாகும் என்று ஆப்ரிக்காவின் புருண்டி ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
நெருங்கி வரும் கிறிஸ்மஸ் விழாவை முன்னிட்டு, புருண்டி நாட்டு ஆயர்கள் விடுத்துள்ள கிறிஸ்மஸ் செய்தியில், நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முழு வலிமையுடன் சமாதான முயற்சிகளை மேற்கொள்வது ஒன்றே இந்த நாட்டை மற்றொரு போரிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளனர்.
இனங்களுக்கு இடையே 2006ம் ஆண்டு வரை நடைபெற்ற மோதல்கள் தீர்ந்து, அக்காயங்கள் ஆறுவதற்குள், நாட்டில் திருட்டு, வழிப்பறி, நிலங்கள் ஆக்கிரமிப்பு என்று பல்வேறு வகையான வன்முறைகள் தலையெடுத்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்று ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
சட்டத்திற்குப் புறம்பாக பல்வேறு குழுக்களிடம் ஆயுதங்கள் இருப்பது இந்த வன்முறைகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பிற அமைப்புக்கள் மத்தியில் மனம் திறந்த கலந்துரையாடல் நடைபெறுவதே நாட்டில் அமைதியை நிலைநாட்டும் என்று கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.